×

சுற்றுலா பயணிகள் வருகை இல்லை கடைகள் திறந்தும் பலனில்லை

ஊட்டி: கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சமூக பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மார்க்கெட்களில் கூட்டம் சேர்வதை தடுக்கும் வகையில் திறந்தவெளி சந்தைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகள் வழங்கியது. இதன்படி கடந்த 11ம் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் 34 வகையான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு முழுமையாக அமல்படுத்தப்பட்ட சமயத்தில் வாகன போக்குவரத்து ெவகுவாக குறைந்து காணப்பட்டது. தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோ னா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 15ம் தேதியே சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. தொடர்ந்து 17ம் தேதி முதல் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத்தலங்களும் மூடப்பட்டுள்ளன. சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டு நேற்றுடன் 62 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதனால் சுற்றுலாத்தலங்களை ஒட்டியுள்ள கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் சில கடைகள் செயல்பட தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் சுற்றுலாத்தலங்களுக்கு அருகில் கடை வைத்துள்ளவர்கள் கடை திறக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் அவர்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் வருகையை நம்பி தாவரவியல் பூங்கா பகுதியில் திபெத்தியன் மார்க்கெட், சாலையோர கடைகள், வர்க்கி, சாக்லேட் விற்பனை கடைகள், உல்லன் ஆடைகள் விற்கும் கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. இதனால் வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘ஊட்டி சுற்றுலா நகரமாக உள்ளது. சுற்றுலாத்தலங்கள் முன்பு சுற்றுலா பயணிகளை நம்பி கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தோம். இதனால் கடைகளை நாங்கள் திறந்தும் எங்களுக்கு பயன் இல்லை. இதன் காரணமாக அரசு தளர்வுகள் அளித்தும் கடைகளை திறக்க முடியாமல் தவித்து வருகிறோம். இதனால் வருவாயின்றி கடும் பாதிப்படைந்து வருகிறோம்,’’ என்றனர்.


Tags : shops , No shops ,open , tourists
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி