×

ஏற்காடு அண்ணாபூங்காவில் 3,500 பூந்தொட்டிகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு: பார்த்து ரசிக்கத்தான் யாருக்கும் அனுமதியில்ல...

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு அண்ணாபூங்காவில், 3,500 பூந்தொட்டிகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஊரடங்கு நீடிப்பதால் பார்த்து ரசிக்க யாருக்கும் அனுமதி கொடுக்கவில்லை. ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு, சேலம் மாவட்டத்தின் முதன்மை சுற்றுலா தலமாக விளங்குகிறது. சுற்றுலா பயணிகளின் கொண்டாட்டத்திற்காக,  ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். அத்துடன் பல்வேறு விதமான போட்டிகளும், கலைநிகழ்ச்சிகளும் கோலாகலமாக நடக்கும். இதனை காண, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலத்திலிருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
அதன்படி நடப்பாண்டிற்கான கோடை விழா ஏற்பாடுகள் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வந்தன. மலர் கண்காட்சியில் வைக்க, கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே 10 ஆயிரம் தொட்டிகளில், விதைகள் தூவப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது சீசன் களைகட்டியுள்ள நிலையில், அனைத்து மலர்தொட்டிகளிலும் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.

இதனிடையே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு, பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதன்காரணமாக நடப்பாண்டு ஏற்காடு கோடைவிழா நடைபெறுவதில் சிக்கல் நீட்டிக்கிறது. இந்நிலையில், மலர் கண்காட்சிக்கு தயாரான பூந்தொட்டிகளை வைத்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த, தோட்டக்கலைத்துறையினர் முடிவு செய்தனர். இதனையடுத்து ஏற்காடு அண்ணாபூங்காவில், மேரி கோல்டு, ஜினியா, பிரஞ்ச் ேமரி கோல்டு, காஸ்மாஸ், டேலியா, சால்வியா, ஆந்தூரியம், கிரிசோந்தியம் போன்ற 3,500 பூந்தொட்டிகள் மற்றும் முட்டைகோஸ் மூலம் ‘வீட்டில் இருப்போம், பாதுகாப்பாக இருப்போம்’ என்ற வாசகத்தை அலங்கரித்துள்ளனர்.

இதேபோல், தேசிய பறவையான மயில்போலவும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊரடங்கு இன்னும் நீடிப்பதால் பார்த்து ரசிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இதனிடையே,ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியிடப்படவில்லை. அதேசமயம், நடப்பாண்டு மலர்கண்காட்சி கண்டிப்பாக நடத்தப்படும் என தோட்டக்கலைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இதனையடுத்து, ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ள 6 ஆயிரம் பூந்தொட்டிகளை,மலர் கண்காட்சி நடைபெறும் பகுதியில் அலங்கரித்து வைத்துள்ளனர்.

Tags : Anna Boonga ,Yakkad , Corona Awareness, Yakkad Anna Boonga , 3,500 Flowers
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...