×

நகர்ப்புறங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசியல், மத தலைவர்களை பயன்படுத்த அரசு திட்டம்

புதுடெல்லி: நாட்டின் நகர்புறங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசியல், மத‍த் தலைவர்களை பொறுப்பாளர்களாக பயன்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய சுகாதாரத் துறை செயலர் பிரீத்தி சுதன், ராஜேஷ் பூஷண், சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழு, கொரோனாவால் அதிகம் பாதித்துள்ள 30 மாநகராட்சிகளை சேர்ந்த முதன்மை சுகாதார செயலாளர்கள், மாநகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர், நகர்புறங்களில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து வெளியிட்ட  வழிகாட்டு முறைகள் கொண்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் பெரும்பாலான நகர்புறங்கள் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் நோய் கண்காணிப்பு தீவிரமாக அமல்படுத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. கிராம‍ப் புறங்களை போலவே நகர்புறங்களிலும் இது அதிகரித்து காணப்படுகிறது. குறுகிய பரப்பளவில் அதிகளவிலான மக்கள் வசிப்பதே இதற்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து, இப்பகுதி மக்களிடையே கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த, அப்பகுதி மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் உள்ளூர் அரசியல் தலைவர்கள், மத‍த் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், ஏற்கனவே அப்பகுதிகளில் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.  இதன்படி, ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம் அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பொறுப்பாளர்கள் தங்கள் பகுதியில் செயல்படுத்தப்பட்டுள்ள முயற்சிகள் பற்றி மாநகராட்சி ஆணையருக்கு தெரிவிப்பார்கள். இந்த பொறுப்பாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேம்படுத்துவது குறித்து  இதற்காக நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு குழு, சமுதாயத் தலைவர்கள் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து திட்டங்களை செயல்படுத்துவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 6 மாவட்டங்கள்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பில் 80 சதவீத‍ம், நாடு முழுவதும் 30 மாநகராட்சிகளில் உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இப்பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட உள்ளதாகவும், அப்பகுதியை சேர்ந்தவர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

Tags : Government ,leaders ,areas ,corporations , Municipalities, corona, political, religious leaders, government program
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...