×

லாரியில் வந்த தண்ணீர் பிடிக்க தனிமை முகாமில் குழாயடி சண்டை

சமஸ்திபூர்: பீகாரில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தும் முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு தண்ணீருக்காக சண்டையிடும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பீகாரில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் 1000-த்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3.5 லட்சம் பேர் தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
பாட்னாவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தில்  புல்ஹாரா நகரில் உள்ள பள்ளியானது கொரோனா தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்பட்டுள்ளது. நோய் அறிகுறி உள்ள 150 பேர் இந்த மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த முகாமில் தண்ணீருக்காக 100க்கும் மேற்பட்டோர் தகராறில் ஈடுபடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

இதில் பள்ளியின் மைதானத்தில் தண்ணீர் லாரி வந்து நிற்கிறது. அங்கு தங்கி இருப்போர் பக்கெட்டுக்களை எடுத்து வந்து தண்ணீரை பிடிப்பதற்காக ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு செல்கின்றனர். இதனால், வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தாங்கள் வைத்திருக்கும் பக்கெட்டுக்கள் மூலமாக ஒருவரை ஒருவர் தாக்கியும் கொள்கின்றனர். செல்போனில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் அனைவரும் அருகருகிலேயே நின்று கொண்டுள்ளனர். கொரோனா தனிமைப்படுத்துதல் முகாம்களில் தண்ணீர் பிரச்னை மட்டுமின்றி, அங்கு இருப்போர்களுக்கு சரியான உணவு விநியோகிக்கப்படுவதில்லை மற்றும் சுகாதார வசதி இல்லை என்று ஏற்கனவே பலமுறை புகார் எழுந்துள்ளது.

Tags : fight ,Tubby ,isolation camp , Larry, Water, Bihar, Corona
× RELATED நான் வாழும் வரை சட்டப்போராட்டம் தொடரும்: கவுசல்யா பேட்டி