×

வருமானம் இல்லாமல் 50 நாட்களாக வீட்டிலேயே முடக்கம்: இலவச அட்வைஸ் வேணும்னா வாங்க...உதவி கேட்டீங்கன்னா திரும்பி போங்க..

* சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
* ஏழை மக்களை விரட்டும் மத்திய, மாநில அரசுகள்

சென்னை: ஊரடங்கு காரணமாக கடந்த 54 நாட்களாக எந்த வருமானமும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் மாஸ்க் முக்கியம், சமூக இடைவெளி முக்கியம் என்று நிறைய அட்வைஸ்களை வாரி வாரி தருகின்றன. ஆனால் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக எந்த உதவியும் செய்யாமல் விரட்டி அடிக்கின்றன என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஊரடங்கால் கடந்த 54 நாட்களாக வீட்டில் முடங்கி இருக்கும் நடுத்தர, வறுமைகோட்டின் கீழ் இருப்பவர்கள், கூலி தொழிலாளர்களின் நிலை கந்தல் கோணாலாகி இருக்கிறது.இனியும் பொருளாதார உதவி செய்யாமல் மக்களை வீட்டில் அடைத்து வைக்க முடியாது.

பொருளாதார உதவியும் ெசய்ய கூடாது என்ற நிலையில் தான் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்தன. அதுவும் கடுமையான நிபந்தனைகளுடன் கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் திறக்கலாம். நுகர்வோரான பொதுமக்களையும், தனியார் நிறுவன தொழிலாளர்களையும், கூலி தொழிலாளர்களையும் வாட்டி வதைக்கும் வகையில் பஸ், ஆட்டோ உள்ளிட்ட பொது போக்குவரத்தை முடக்கி வைத்துள்ளது. இதனால் கடைகள், தொழிற்சாலைகள், அலுவலகங்கள் திறந்தும் பயனில்லை.  தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1000 மானியம் வழங்கியது. இந்த ஆயிரம் ரூபாய் 54 நாட்களுக்கு எப்படி போதுமானதாக இருக்கும். தினசரி வேலை செய்தால்தான் வருமானம் என்ற நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நிலையை மத்திய-மாநில அரசுகள் கவனிக்கவில்லை.

மாஸ்க் ேபாடுங்கள், சமூக இடைவெளி கடைபிடியுங்கள், கபசுர குடிநீர் குடியுங்கள் என்று ஏகப்பட்ட அட்வைஸ்களை அள்ளித் தருகின்றன. ஆனால் பொருளாதார ரீதியாக கை தூக்கிவிட வேண்டியவர்களான நடுத்தர, அடித்தட்டு மக்களை கைவிட்டுவிட்டன. முழுமையான தளர்வு கொண்டுவந்தாலும் பெட்டி கடைகளில் கூட ஒரு நாளைக்கு 500 ரூபாய் வியாபாரம் இருக்காது. இதுகுறித்து ஆட்டோ தொழிலாளி செந்தில் கூறும்போது, “நான் ஆட்டோ ஓட்டினால் தினசரி 500 முதல் 700 வரை வருமானம் கிடைக்கும். இப்படி மாதம் கிடைக்கும் சுமார் 20 ஆயிரம் பணத்தில் வீட்டு வாடகை, குழந்தைகளை பள்ளியில் படிக்க வைப்பது, டிவி, பிரிட்ஜ் வாங்கியதற்கு இஎம்ஐ கட்டி ஏதோ கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தினேன்.

ஆனால், இந்த 54 நாட்களாக நான் வேலைக்கு போகவில்லை. ஊரடங்கு குறித்து டிவியில் பேசும் நம்மை ஆளும் தலைவர்கள், அப்படி செய்யுங்கள், இப்படி இருங்கள். உங்களுக்கு கொரோனா வராது என்று எங்களுக்கு இலவசமாக அட்வைஸ் மட்டுமே செய்கிறார்கள். வருமானத்துக்கு எந்த வழியையும் சொல்லவில்லை. மத்திய, மாநில அரசுகள் அனைத்து ஏழை, எளியவர்கள் குடும்பத்திற்கு தலா 5 ஆயிரம் வழங்கி இருந்தால் சமாளித்திருக்க முடியும். இப்போது, அரசாங்கமே, கொரோனாவோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று கூறி வருகிறது.

இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே? எதற்கு ஊரடங்கு? நாங்கள் அரசை கேட்பதெல்லாம், நீங்கள் எங்களுக்கு எந்த உதவியும் செய்ய மாட்டீர்கள், செய்யவும் வேண்டாம். எங்களை தொழில் செய்ய அனுமதி அளியுங்கள். நாங்கள் எங்களை பாதுகாத்துக் கொள்வோம்” என்றார். சென்னை, வடபழனியை சேர்ந்த குடும்ப தலைவி ஒருவர் கூறும்போது, “இந்த ஊரடங்கால் கடந்த 54 நாட்கள் வீணானதுதான் மிச்சம். மக்களுக்கு எந்தவித நன்மையும் இல்லை” என்று விரக்தியுடன் கூறினார்.

Tags : Income, social activists, poor people, central and state governments, corona, curfew
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...