×

கொரோனா பாதிப்பால் 4ம் கட்டமாக தேசிய ஊரடங்கு மே 31 வரை நீட்டிப்பு விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி

* மண்டலங்களை பிரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பால் 4ம் கட்டமாக தேசிய ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மண்டலங்களை பிரிப்பது, பஸ் போக்குவரத்து தொடங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி நாடு முழுவதும் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதல் கட்டமாக 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு ஏப்ரல் 14க்குப் பிறகு, மேலும் 19 நாட்களுக்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. பின்னர், 3ம் கட்ட ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதன்படி, 54 நாட்கள் நாடு முழுவதும் முடக்கப்பட்டும், வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால், ஊரடங்கை முழுமையாக முடிவுக்கு கொண்டு வர எந்த மாநில அரசுகளும் விரும்பவில்லை. எனவே, அந்தந்த மாநில அரசுகளின் பரிந்துரைப்படி 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு பரிந்துரைகளை கேட்டு பெற்றது. இந்நிலையில், நேற்றுடன் 3ம் கட்ட ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், மேலும் 14 நாட்களுக்கு வரும் 31ம் தேதி வரை 4ம் கட்ட தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்றிரவு அறிவித்தது.

4ம் கட்ட ஊரடங்கிற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.  இதில் வைரஸ் பாதிப்பை மதிப்பிட்டு சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளை அந்தந்த மாநிலங்களே முடிவெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்குகள், மைதானங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சலூன், முடிதிருத்தும் கடைகள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், மார்க்கெட்டுகள் உள்ள அனைத்து கடைகளும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் அத்தியாவசிய நடவடிக்கைகள் தவிர வேறெதற்கும் அனுமதியில்லை என புதிய வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:

* அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் விமான பயணம், மெட்ரோ ரயில் சேவை, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், ஓட்டல், ரெஸ்டாரன்ட்டுகள், சினிமா தியேட்டர், மால்கள், நீச்சல் குளங்கள், ஜிம், வழிபாட்டு தலங்கள், அனைத்து அரசியல், சமூக, மத நிகழ்ச்சிகள் ஆகியவைகளுக்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது.
* இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை அத்தியாவசியமற்ற பணிகளுக்காக மக்கள் வெளிவருவதற்கான தடை நீடிக்கிறது.
* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய நடவடிக்கைகள் மட்டுமே மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும். அந்த பகுதிகளை விட்டு மக்கள் வெளியே செல்வதும், உள்ளே வருவதும் தடை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். அப்பகுதியில் தீவிர வைரஸ் தொற்றை கண்டறிதல், வீடு வீடாக கண்காணித்தல் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
* மாநிலத்திற்குள்ளும், வெளி மாநிலத்திற்கும் பயணிகள் வாகனங்கள் மற்றும் பஸ்களை மாநிலங்களின் பரஸ்பர ஒப்புதலுடன் இயக்கிக் கொள்ளலாம். இதற்கான முடிவுகளை அந்தந்த மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம்.
* வைரஸ் பாதிப்புகளை மதிப்பிட்டு, மத்திய சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைப்படி, அந்தந்த மாநிலங்களே சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டல பகுதிகளை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
* விளையாட்டு அரங்கங்கள், மைதானங்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால், பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* எல்லை தாண்டிய சரக்கு போக்குவரத்துக்கு அனைத்து மாநில அரசுகளும் அனுமதிக்க வேண்டும்.
* கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் மால்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும், குறிப்பிட்ட நேரத்திற்கு திறக்க அனுமதி. ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், மார்க்கெட்டுகளை திறக்கலாம்.
* 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.
* ரெஸ்டாரன்ட்களில் பார்சல்களுக்கு மட்டும் அனுமதி உண்டு. இவ்வாறு புதிய வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. இது, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

5 பேருக்கு மட்டுமே அனுமதி
அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென புதிய வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் 6 அடி தூர இடைவெளியை பராமரிக்க வேண்டும். ஒரு நேரத்தில் 5க்கும் மேற்பட்டோரை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags : Corona Impact Allows the National Curfew to be opened in Stage 4 until May 31...
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...