×

இஎம்ஐ கேட்டு மிரட்டும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்  நேற்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு ஆணை காரணமாக அனைத்து வகையான கடன்களுக்குமான மார்ச், ஏப்ரல், மற்றும் மே மாத தவணைகளை செலுத்தத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த அறிவிப்பு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு  மாதாந்திர கடன் தவணை செலுத்தும் சுமையிலிருந்து தற்காலிக விடுதலை அளித்தது என்பது உண்மை. ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி அனைத்து வகையான கடன் தவணைகளும் 3 மாதங்களுக்கு தானாக ஒத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தனியார் வங்கிகளும், நிதிநிறுவனங்களும் இதை பின்பற்றாமல் அனைத்து தவணைகளையும் செலுத்தும்படி கட்டாயப்படுத்துகின்றன.

இதனால் கடன்தாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனங்களிடம் வாகனக்கடன் பெற்ற மக்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.  எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு, வாகனக்கடன் பெற்றவர்களிடம் கடன் தவணையை கட்டாயப்படுத்தி வசூலிக்கும் தனியார் வங்கிகள் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 மாத கால கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.  மார்ச் 31ம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறும் வங்கிகளுக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும்.


Tags : Ramadas ,EMI ,banks , EMI, Private Banks, Ramadas
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...