×

தலைவலி வந்தால் கொரோனா வருமா? ‘கூகுள் டாக்டரிடம்’ கேட்ட சந்தேகம்

சென்னை: சும்மா இருக்குறது எவ்வளவு கஷ்டம்னு வடிவேலு சொல்லும்போது ரசித்து சிரித்தவர்கள்; அது எவ்வளவு நரக வேதனை என உணர ஆரம்பித்து விட்டனர்.  இவ்வளவு நாளா வீட்டுக்குள்ளேயே இருக்குறதே பெரிய தலைவலிதான். குழந்தைகளை சமாளிப்பதில் தொடங்கி, எல்லாவற்றையும் இழுத்துபோட்டு செய்யவேண்டியுள்ளது. வெளிய தலை காட்டலாம்னா, கொரோனா பயம் வேற. சந்தேகத்தை யாரிடம் கேட்பது, ஏன்? எப்படி என்ற கேள்விகளுக்கு கூகுளில் தேடித்தேடி குழம்பிக்கொண்டிருக்கிறார்கள் அப்பாவி மக்கள். ஏப்ரலில் அப்படி என்னதான் தேடினார்கள் என்று புட்டுப்புட்டு வைத்துள்ளது கூகுள். கடந்த 8ம் தேதி வரை உள்ள தேடல்களை அடிப்படையாக கொண்டு இந்த புள்ளி விவரங்களை கூகுள் வெளியிட்டுள்ளது.

கொரோனாவுக்கு தடுப்பூசி வந்து விட்டதா? எப்போது வரும். இன்றைய கொரோனா செய்தி என்ன? ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் பயன், விலை என்ன? எப்படி பயன்படுத்துவது, தலைவலி கொரோனா அறிகுறியா என்றெல்லாம் கூகுள் டாக்டரிடம் கேள்வி கேட்டு துளைத்துள்ளனர்.
தடுப்பு மருந்து பற்றி அதிகபட்சமாக 38.6 சதவீத தேடல்கள் உள்ளன. இதுபோல் ஹைட்ரோகுளோரோகுயின் (9.3%), வெண்டிலேட்டர் (5.3%), ரத்த பிளாஸ்மா சிகிச்சை (3%) தேடியுள்ளனர்.இதுபோல், தடுப்பு நடவடிக்கைகளுக்கு என்ன செய்வது என்ற தேடலும் அதிகமாக உள்ளது.

இதில் மாஸ்க் தயாரிப்பது, மாஸ்க் அணிவது போன்ற தேடல்கள் 30.2 சதவீதம். சானிடைசர் பயன்கள், தயாரிப்பது எப்படி (7.3%), கை கழுவுதல், (1.9%), சமூக இடைவெளி (1.5%) உள்ளது. கொரோனா வைரஸ் வந்து விடுமோ என்று நினைத்தாலே பயமாக உள்ளது. இதில், கொரோனா வைரசால் புற்றுநோய், ஆஸ்துமா வருமா என்றெல்லாம் தேடியுள்ளனர்.கொரோனா வைரஸ் கேன்சர் தொடர்பு பற்றி (17.7%), கொரோனா வைரஸ் ஆஸ்துமா என (17.2%), கொரோனா வைரஸ் நீரிழிவு (11.7%), புகைபிடித்தால் கொரோனா வருமா என (7.1%), உடல் பருமன் ஏற்படுமா என (2.4%) தேடல்கள் உள்ளன.

உலக அளவில் ஹைட்ரோ குளோரோகுயின் பற்றி இந்தியாவில்தான் மிக அதிக தேடல் (100%). இதற்கு அடுத்ததாக இதுபற்றி அமெரிக்காவில் தேடி யுள்ளனர். இதுபோல் ரத்த பிளாஸ்மா பற்றி அமெரிக்காவிலும், தடுப்பு மருந்து பற்றி அர்ஜென்டினாவில், வெண்டிலேட்டர் நைஜீரியாவில் தேடல்கள் அதிகம் உள்ளன. இவற்றில் உலக அளவில் தேடப்பட்டத்தில் சதவீத அடிப்படையில் இந்தியாவில் ரத்த பிளாஸ்மா (57%), தடுப்பு மருந்து (40%), வெண்டிலேட்டர் (37%) தேடல்கள் உள்ளன.இதுபோல் பாதுகாப்பு பற்றிய தேடலில் சானிடைசர் (சிங்கப்பூர்), தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் (பிலிப்பைன்ஸ்), கை கழுவுதல் (வியட்நாம்), மாஸ்க் (ஹாங்காங்), சமூக இடைவெளி (சிங்கப்பூர்) ஆகிய நாடுகளில் அதிக தேடல்கள் காணப்படுகிறது.

Tags : Doctor ,Google , Headache, Corona, Google Dr
× RELATED மதுரையில் மருத்துவம் படிக்காமல்...