×

தமிழகத்தில் 2வது நாளாக மதுவிற்பனை கொடிகட்டி பறந்தது: புட்டியாக இல்லாமல் பெட்டியாக வாங்கினர்: குடிமகன்கள் குஷி

சென்னை: தமிழகத்தில் 2வது நாளாக நேற்று டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை கொடிகட்டி பறந்தது. குடிமகன்கள் பெட்டி பெட்டியாக மதுவகைகளை வாங்கிச்சென்றனர். தமிழகத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நேற்று முன்தினம் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் மாவட்டத்தை தவிர்த்து தமிழகம் முழுவதும் 3,600 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டது. மது விற்க டாஸ்மாக் நிர்வாகம் டோக்கன் நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. நாள் ஒன்றுக்கு 500 பேருக்கு மட்டுமே டோக்கன் கொடுக்கப்படும் என அறிவித்ததால் காலை 7 மணி முதலே டாஸ்மாக் கடைகளின் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். தமிழகத்தில் 2வது நாளான நேற்றும் மதுவிற்பனை களைகட்டியது. முதல் நாள் டோக்கன் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்த குடிமகன்கள் நேற்று காலை 6 மணிக்கே மதுக்கடைகளுக்கு வந்து காத்திருந்தனர்.

சில மாவட்டங்களில் முகக்கவசம் மற்றும் குடையுடன் வந்தவர்களுக்கு மட்டுமே மது வழங்கப்பட்டது. நேற்று முன்தினம் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகளில்  மதுபானங்கள் விற்று தீர்ந்ததால் குடோன்களில் இருந்து மதுபானங்களை கடைகளுக்கு இடமாற்றம் செய்யும் பணி இரவு முழுவதும் நடைபெற்றது. இதேபோல், நேற்று கருப்பு மற்றும் நீல நிறங்களில் டோக்கன் வழங்கப்பட்டு மதுவிற்பனை செய்யப்பட்டது. மது வழங்குவதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் பெட்டி பெட்டியாக குடிமகன்கள் மதுவகைகளை வாங்கிச்சென்றனர். ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து மதுவகைகளை வாங்கினர்.

இதனால், மதுவாங்கி குவித்த குடிமகன்கள் டோக்கன் கிடைக்காத நபர்களுக்கு அதிக விலைக்கு மது விற்றதை காணமுடிந்தது. மேலும், டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வட்டமிட்டு அதில் குடிமகன்கள் தனிமனித இடைவெளியுடன் நிற்கவைக்கப்பட்டனர். மதுவாங்க கூடுதல் நேரம் காத்திருக்க வேண்டும் என்பதால் மதிய உணவை குடிமகன்கள் கையுடன் எடுத்துவந்தனர். கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீசார் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தினர். பெரும்பாலான கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும், ஊழியர்களும் திணறினர்.

2வது நாளில் 130.1 கோடி விற்பனை
சென்னை மண்டலம் - 4.6 கோடி, திருச்சி மண்டலம் - 32.5 கோடி, மதுரை மண்டலம்- 34.8 கோடி, சேலம் மண்டலம் -29.6 கோடி,கோவை மண்டலம் - 28.6 கோடி என மொத்தமாக தமிழகத்தில் நேற்று 130.1 கோடி மதுவிற்பனை நடைபெற்றது. முதல் நாளான நேற்று முன்தினம் 163.5 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. இரண்டாம் நாளான நேற்று 130.1 கோடி விற்பனையானது. ஆக இரண்டு நாளில் தமிழகத்தில் 293.6 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்தன.



Tags : Tamil Nadu ,Heyday ,Matuvirpanai ,Day of the State , amil Nadu, Liquor, Citizens, Corona, Curfew
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...