ஜோகோவிச் ஒரு ஏமாற்றுக்காரர்...கிர்ஜியோஸ் தாக்கு

சென்னை: உலகின் நம்பர் 1 ஆட்டக்காரான  நோவாக் ஜோகோவிச் ஒரு ஏமாற்றுக்காரர். அவரை விட  இங்கிலாந்தின் ஆண்டி மர்ரேதான் சிறந்தவர்… என்று ஆஸி. டென்னிஸ் நட்சத்திரம் நிக் கிர்ஜியோஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னணி டென்னிஸ் வீரரான ஆண்டி மர்ரே தனது 33வது பிறந்தநாளை  கடந்த வெள்ளியன்று கொண்டாடினார். சமூக ஊடகத்தில் ரசிகர்களுடன் ஆன்லைனில் உரையாடிய மர்ரேவுக்கு, கிர்ஜியோஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து  அவர், ‘நீங்கள் சிறந்த வீரர். உலகின் நம்பர் 1 வீரரான  ஜோகோவிச்சை விடவும் சிறந்தவர் என்றால் அது மிகையில்லை.  நீங்கள் இருவரும் மோதிய போட்டிகளில் உங்கள் ஆட்டம்தான் சிறந்ததாக இருந்தது. அவர் சர்வீசில் ஏமாற்றுக்கார். ஆனால் அதை அற்புதமாக சமாளித்து வெற்றி பெற்றீர்கள்.

உங்கள்  சர்வீஸ்  ஒளி போல் இருக்கிறது’ என்று  கருத்துகளை தெரிவித்த வண்ணம் இருந்தார். அதற்கு மர்ரே, ‘போட்டியின் முடிவுகள் தான் எதையும் தீர்மானிக்கும்’ என்று எளிதாக முடித்துக் கொண்டார். தொடர்ந்து மர்ரேவுக்கு இடுப்பில் ஏற்பட்ட காயம், அதிலிருந்து மீண்டும் களத்திற்கு திரும்பியது என்று இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் தொடர்ந்தது. முடிவில்  இரட்டையர் போட்டிகளில் நாம் இருவரும் சேர்ந்து விளையாடலாம் என்று நிக் தனது விருப்பத்தை தெரிவித்தார். மர்ரே 2012 யுஎஸ் ஓபன், 2013 விம்பிள்டன் இறுதிப் போட்டிகளில் ஜோகோவிச்சை தோற்கடித்து கிராண்ட் ஸ்லாம்  பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

காரணம் போதை!

கான்பெரா வீட்டிலிருந்தபடி நள்ளிரவுக்கு பிறகு அரட்டையை  தொடங்கியபோது நிக்  6 டம்ப்ளர் மது அருந்தியிருந்தாராம். போதை தலைக்கேறிய நிலையில் தான்,  மனதில் பட்டதையெல்லாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.  ஜோகோவிச்சை கடுமையாக விமர்சனம் செய்தவர், இந்த ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் போன்றவைகளால்  ரெட் ஒயின் மீதான ஆர்வம் நம்ப முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது. கூடவே அந்த ஒயின் குறித்த அறிவும் வளர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். தரவரிசையில் 40வது இடத்தில் இருக்கும் நிக்,  டென்னிஸ் உலகின் மிஸ்டர் பிராப்ளமாக, சர்ச்சை நாயகனாக விளங்கி வருகிறார்.

Related Stories:

>