×

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய டிசம்பர் - மார்ச் மாத ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் உள்ளது: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலக்கட்டத்துக்கு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவையில் உள்ளது என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொடர்பாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறுகையில், ‘‘ஜிஎஸ்டி இழப்பீடு குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் வழங்கப்படுவது அல்ல. அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்படுவது தான்.  இருப்பினும் கடந்த டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான நான்கு மாதங்களுக்கு மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படவில்லை’’ என்றார்.

ஜிஎஸ்டி விதிகளின்படி, வருவாய் குறையும் மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கி வருகிறது. ஜிஎஸ்டி அறிமுகம் செய்தபிறகு, 2017-18, 2018-19 மற்றும் கடந்த நிதியாண்டின் முதல் 4 மாதங்களுக்கு (ஏப்ரல் - ஜூலை) மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு இழப்பீடு தாமதம் இன்றி வழங்கப்ப்டடது. ஆனால், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு வழங்கவில்லை. இதை தொடர்ந்து மாநிலங்கள் கடந்த டிசம்பரில் போர்க்கொடி தூக்கத் தொடங்கின.

பிரச்னை பெரிதானதால், அக்டோபர் - நவம்பர் மாதங்களுக்கான இழப்பீடாக 34,053 கோடியை 2 தவணையாக பிப்ரவரி மற்றும் ஏப்ரலில் வழங்கின. 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடாக, 2.45 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில், 2017 ஜூலை முதல் மார்ச் 2018 வரை 48,785 கோடி, 2018-19 நிதியாண்டில் 81,141 கோடி, கடந்த ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களுக்கு 17,789 கோடி, ஜூன் - ஜூலை மாதங்களுக்கு 27,956 கோடி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களுக்கு 35,298 கோடி, அக்டோபர் - நவம்பர் மாதங்களுக்கு 34,053 கோடி வழங்கப்பட்டுள்ளது.

பிஎப்பில் 3,360 கோடியை எடுத்த 12 லட்சம் ஊழியர்கள்
பிஎப் சேமிப்பில் இருந்து 12 லட்சம் ஊழியர்கள் 3,360 கோடியை எடுத்துள்ளனர் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஊரடங்கு காலத்தில், நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணத்தேவையை கருத்தில் கொண்டு, பிஎப் சேமிப்பில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ள கடந்த மார்ச் 28ம் தேதி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, வேலையிழப்பு மற்றும் வருமானம் குறைவால் மேற்கண்ட பணத்தை ஊழியர்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Union Minister of Information ,states , States, GST, Union Minister
× RELATED அமெரிக்காவில் கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்து விபத்து