×

பாஸ்டேக் வேலை செய்யாவிட்டால் சுங்கச்சாவடியில் 2 மடங்கு கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, பாஸ்டேக் வேலை செய்யாவிட்டால் அல்லது செல்லத்தக்கதாக இல்லாவிட்டால் சுங்கச்சாவடிகளில் அந்த வாகனங்களிடம் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, பாஸ்டேக் கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டது. பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த தனி வழி உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்ட பிறகு, பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.

 இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, வாகனங்களில் செல்லத்தக்க பாஸ்டேக் இல்லாவிட்டாலும், பாஸ்டேக் பொருத்தப் படாவிட்டாலும், பாஸ்டேக் வேலை செய்யாவிட்டாலும், சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக்கிற்கான பிரத்யேக பாதையில் நுழையும் வாகனங்களிடம் இரட்டிப்பு  கட்டணம் வசூலிக்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பாஸ்டேக் இல்லாவிட்டால்தான் இரட்டிப்பு கட்டணம் என இருந்ததை இவ்வாறு மாற்றியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Bostock , fastag, Customs, Central Government
× RELATED சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வருவாய்...