×

கூடுதல் வரி விதிக்க பரிந்துரை: புதுவையில் மதுபான விலையை உயர்த்த அதிரடி முடிவு

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் மதுபானங்கள் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பகுதியில் மொத்தம், சில்லரை மற்றும் சுற்றுலா என்ற பெயரில் 475 மதுபான கடைகள் செயல்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து மதுபான கடைகளும் அதிரடியாக மூடப்பட்டன. தொடர்ந்து கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து காவல்துறை மூலம் 246 வழக்குகள் பதிவு ெசய்யப்பட்டு விதிமீறல்களில் ஈடுபட்ட 89 கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதுச்சேரி மாநிலத்தில் மதுபானக் கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் வரி வருவாய்  அடியோடு பாதிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பளத்தை குறைப்பற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே புதுச்சேரி அரசின் வரி வருவாயை பெருக்க வணிக நிறுவனங்கள் செயல்படும் நேரத்தை அதிகரித்து இரவு 9 மணி வரை அனுமதிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதற்கிடையே மதுபான கடைகளை திறப்பது தொடர்பாக நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மதுபான உரிமங்கள் மீது அபராதம் விதிப்பது, கலால் வரியை மேலும் அதிகரிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. இதற்கிடையே கவர்னர் கிரண்பேடி அனைத்து துறை செயலர்களுடன் கான்பரன்ஸ் கால் முறையில் தினமும் மாலை 6 மணிக்கு ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, தலைமை செயலரிடம் மதுபானங்கள் மீது கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக ஆலோசித்தார். மேலும் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள்  திறக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நாளைக்கு 500 பேருக்கு டோக்கன் வழங்கி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் புதுச்சேரியில் மதுபான கடையை திறந்தால் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் இருந்து அதிகப்படியானோர் புதுவைக்கு வந்து செல்வார்கள். இதன் மூலம் கொரோனா பரவல் அதிகரித்து சமூக தொற்றாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. தமிழகத்தை விட குறிப்பிட்ட மதுபானங்கள் மீதான விலை குறைவாக இருப்பதால் பலர் புதுச்சேரிக்கு வரும் வாய்ப்பு உள்ளது. மேலும் பாகூர், மதகடிப்பட்டு, காலாப்பட்டு உள்ளிட்ட எல்லையோர கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் மதுபான விலை வித்தியாசம் இருக்க கூடாது. சில மாதங்களுக்கு கூடுதல் வரி விதிக்கலாம்.

இந்த கூடுதல் வரியை கொரோனா பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே தமிழகத்துக்கும் புதுச்சேரிக்கும் விலை வித்தியாசம் இருக்க கூடாது என்பதை வலியுறுத்தினார். மேலும் எல்லையோர மதுபான கடைகள் திறப்பதில் கடும் கட்டுப்பாடுகளை விதிப்பது அல்லது முதல்கட்டமாக நகரப்பகுதியில் உள்ள கடைகளை மட்டும் திறப்பது என பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்துள்ளார். நாளை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் தலைமை செயலர் இந்த கருத்தினை எடுத்துரைப்பார் என தெரிகிறது. இதன்மூலம் புதுச்சேரியில் 40 சதவீதத்துக்கும் மேல் மதுபானங்களின் மீது வரி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Additional taxes, renewal, liquor prices
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்