ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழைக்கு, தற்காலிக காய்கறி கடைகளின் தகரங்கள் பறந்தன. பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் மழையில் நனைந்து வீணாயின. தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறிகள் மொத்த விற்பனை செய்யும் ஏலச்சந்தை நகர்ப்பகுதியில் செயல்பட்டு வந்தது. இங்கு வியாபாரிகள், விவசாயிகள் சமூக இடைவெளியின்றி இருந்ததால், கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மேலும், சென்னை கோயம்பேடு சந்தைக்கும், இந்த சந்தைக்கும் நேரடி தொடர்பு இருந்தது. இதனால் நகர் பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறி மொத்த விற்பனை சந்தை, கடந்த 6 நாட்களுக்கு முன் நகர் பகுதியை ஒட்டியுள்ள அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட கடைகள் தகரத்தால் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு காய்கறி மொத்த விற்பனை நடந்து வந்தது.
வியாபாரிகள் இங்கு காய்கறிகளை கொள்முதல் செய்து, வெளியூர்களுக்கு அனுப்பி வந்தனர். நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு, காய்கறி மொத்த விற்பனை கடைகள், அப்படியே சரிந்து விழுந்தன. சில கடைகளில் இருந்த தகரங்கள் காற்றில் பறந்தன. கடைகளில் வைக்கப்பட்டிருந்த முருங்கைக்காய், கத்தரிக்காய், தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் மழையில் நனைந்து வீணாயின. இதனால் விவசாயிகளுக்கும், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். தகரத்தால் ஆன கடைகள் சேதமடைந்ததாலும், காய்கறிகள் வீணானதாலும் வியாபாரிகளுக்கு பல லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.