×

கொரோனாவால் முடங்கியது நெசவு தொழில்ரூ.15 கோடி லுங்கி, சேலைகள் தேக்கம்: வாழ்வாதாரத்தை தொலைத்த நெசவாளர்கள்

வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா ஊரடங்கு காலத்தில் உற்பத்தியான ₹15 கோடி மதிப்பிலான லுங்கி மற்றும் சேலைகள் ஆகியன தேங்கியதுடன் தொழிற்கூடங்கள் முடங்கி போனதால் நெசவாளர்கள் மட்டுமின்றி விசைத்தறி, கைத்தறி கூட உரிமையாளர்களும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். உலகின் சுழற்சியையே முடக்கி போட்ட கொரோனா வைரஸ் பரவலை மட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளின் அரசாங்கங்கள் ஊரடங்கை கையில் எடுத்தன. இதனால் பலதரப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் நிலைகுலைந்து போனது. சிறு, குறுந்தொழில்கள் மட்டுமின்றி பெருந்தொழில்களும் முடங்கிய நிலையில் உற்பத்தி பொருட்களும் சந்தைக்கு செல்ல வழியின்றி முதலீட்டாளர்களும் தவித்து போயினர்.ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மட்டுமின்றி திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான விசைத்தறி, கைத்தறி கூடங்கள் தங்களின் ‘கடகட’ சத்தத்தை நிறுத்தி கொண்டன. குறிப்பாக வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் குடியாத்தம், கே.வி.குப்பம், காங்கேயநல்லூர், சத்துவாச்சாரி, ஆம்பூர் பெரியாங்குப்பம், திருப்பத்தூர் சின்ன குனிச்சி, பெரிய குனிச்சி, ரெட்டி வலசை, நெமிலி, காவேரிப்பாக்கம், திருப்பாற்கடல், பனப்பாக்கம், நாகவேடு, மேலபுலம் புதூர், சேந்தமங்கலம், சம்பத்ராயன்பேட்டை, அசநெல்லிகுப்பம், சிறுணமல்லி ஆகிய இடங்களிலும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் விசைத்தறி கூடங்களும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைத்தறி கூடங்களும் நிறைந்துள்ளன.

இங்கு உற்பத்தியாகும் லுங்கிகள் துபாய், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுக்கும், மேற்கு வங்கம் உட்பட வடக்கு, வடகிழக்கு மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மாதம் ஒன்றுக்கு ₹5 கோடி லுங்கி வர்த்தகம் மட்டுமே நடக்கிறது. இதுபோக கைத்தறி சேலைகள், கைக்குட்டைகள் என ₹1 முதல் ₹2 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது.இந்த விசைத்தறி, கைத்தறி கூடங்களை நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இதில் கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ள நெசவாளர்களும், பதிவு செய்யாத நெசவாளர்களும் அடக்கம். இதில் தனிநபர்கள் வைத்துள்ள கைத்தறி, விசைத்தறி மூலம் ஆரணி, காஞ்சிபுரம், வாலாஜாபாத் ஆகிய இடங்களில் இருந்து பட்டு நூல், பாவு ஆகியவற்றை வாங்கி வந்து ₹100 முதல் ₹200 வரை கூலிக்கு பட்டுச்சேலை, வேட்டி ஆகியவற்றை நெய்து தருபவர்களும் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக உற்பத்தி செய்யப்பட்ட லுங்கிகள், சேலைகள், வேட்டிகள், கைக்குட்டைகள் என ₹15 கோடி மதிப்பிலான சரக்குகள் அப்படியே தேங்கி போயின. அதேபோல் மூலப்பொருட்களான நூல், பாவு ஆகியன போக்குவரத்து தடையால் கொள்முதல் செய்ய முடியாத நிலையால் விசைத்தறி, கைத்தறி கூடங்கள் மூச்சை நிறுத்திக் கொண்டன. இதனால் லுங்கி உற்பத்தி மட்டுமின்றி, கைத்தறி சேலை, கைக்குட்டை, பள்ளி சீருடைகள் என அனைத்தின் உற்பத்தியும் முடங்கி போனது.

நெசவுத்தொழிலை பொறுத்தவரை அரசு மற்றும் அரசு சாரா நெசவாளர்கள் என சுமார் 20 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் மொத்தமாக கொள்முதல் செய்யப்படுகிறது. இதுதவிர நெசவுத்தொழிலை சார்ந்துள்ள சாயம் போடுதல், பாவு போடுதல் போன்ற தொழில்களை நம்பி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஊரடங்கால் ஏற்றுமதி முடங்கி சரக்குகள் தேக்கம், மூலப்பொருட்கள் கிடைக்காமல் உற்பத்தி முடக்கம் ஆகியவற்றால் விசைத்தறி கூட, கைத்தறி கூட அதிபர்கள் மட்டுமின்றி, அதை நம்பி வாழும் நெசவாளர்கள், நெசவுத்தொழிலை சார்ந்த தொழிலை நம்பியுள்ளவர்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.வெளிமாநிலங்களில் இருந்து வரவேண்டிய பாவு நூல்களை கொள்முதல் செய்ய முடியாததால் கிராமப் பகுதிகளில் உள்ள கூலி நெசவு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது இதனால் தொழிலாளர்களின் தினசரி வருமானத்திற்கு வழி இல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர். எனவே, மத்திய, மாநில அரசுகள் கடந்த 45 நாட்களாக முடக்கத்துக்கு ஆளாகி பாதிக்கப்பட்ட நெசவுத்தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு நிவாரணங்களை அளிப்பதுடன், ஊரடங்கு தளர்த்தப்படும் நிலையில் நெசவுத்தொழிலை தூக்கி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நெசவாளர்கள், விசைத்தறி, கைத்தறி கூட அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனிநபர் உற்பத்தி
கைத்தறி நெசவு மூலம் தினமும் 6 முதல் 8 லுங்கிகளும், சேலை என்றால் தினமும் 4 சேலைகளும் உற்பத்தி செய்ய முடியும். விசைத்தறி மூலம் நாள் ஒன்றுக்கு 20 லுங்கிகளும், சேலை என்றால் 12 சேலைகள் வரையும் உற்பத்தி செய்ய முடியும். இதற்காக ஒரு நெசவாளிக்கு ₹300லிருந்து ₹400 வரை தினக்கூலியாக கிடைக்கும்.

பள்ளி சீருடைகள் வழங்குவதில் சிக்கல்
மூலப்பொருட்கள் கிடைப்பதில் திடீரென ஏற்பட்டுள்ள சிக்கலால் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சீருடை, பொங்கல் பண்டிகைக்கு அரசு சார்பில் ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பாதிக்கப்பட்டதால் நடப்பு ஆண்டுக்கு சீருடைகளும், பொங்கலுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலையும் வழங்குவதில் சிக்கல் நீடிக்கும் என்று நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.


தொடங்கியது வர்த்தகம்
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி ஏற்றுமதியாகாமல் தேங்கி கிடந்த ₹10 கோடி மதிப்பிலான லுங்கிகள் கடந்த 2 நாட்களாக துறைமுகங்கள் மூலமாகவும், சரக்கு ரயில்கள் மூலமும் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ஊரடங்கு முடிந்தாலும் சிறு, குறுந்தொழில்கள் நிலையில் வரும் விசைத்தறி, கைத்தறி கூடங்களுக்கு அரசு சில மாதங்களுக்கு மானிய விலையில் மூலப்பொருட்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் விசைத்தறி, கைத்தறி கூட அதிபர்கள்.

Tags : Corona , Textile Industry, Disrupted , Corona
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...