×

வைரலாக மிரட்டும் ‘வைரஸ் தொற்று’ உலக மக்களை முடக்கியதா ஊரடங்கு...?

மதுரை:  கொரோனா... கூகுள் வெப்சைட்டில் மட்டும் சுமார் 2 கோடி முறைக்கும் மேலாக டைப் செய்யப்பட்டுள்ளதாம்.  கடந்த 4 மாதங்களில் வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்ட ஒரு வார்த்தை. வலையை விரிச்சு நம்மளை அடியோட வீட்ல முடங்க வச்சதும் இதுதான். கோவிட் - 19 என்ற பெயரோடு சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில், ‘அழையா விருந்தாளியாக’ நமது உடலுக்குள் புகுந்து, இப்போது வல்லரசு நாடான அமெரிக்கா முதல் வளைகுடா நாடுகள், வரைபடத்திலேயே தேட வேண்டிய நாடுகளில் கூட பல்கி பெருகியிருக்கிறது. தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், கண்ணுக்கு தெரியாத ஒரு வைரஸ் களேபரம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம் பெருகி வரும் வைரஸ் தொற்றை தடுக்க அரசு எடுத்த முதல் அதிரடி ஊரடங்கு. அது முதன்முதலில் தொற்று பரவிய சீனா முதல் அடுத்தடுத்து பரவிய அனைத்து நாடுகளுமே பின்பற்றிய ஒரு முறை.

என்னதான், ‘விழித்திரு... தனித்திரு... வீட்டிலிரு...’ என அரசு அறிவித்தாலும், அடுத்து என்ன செய்வது என திருதிருவென விழித்துக் கொண்டும், உதவுவோர் யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டும், வேலைக்கு போக முடியாம வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழலிலும் மக்கள் தள்ளப்பட்டனர். (இதைத்தான் அரசு மறைமுகமாக சொல்கிறதோ?). இந்தியாவை பொறுத்தவரை இதுவரை மூன்றுகட்ட ஊரடங்கை பார்த்து விட்டோம். மார்ச் 22ம் தேதி பிரதமர் மோடி அறிவித்து ஒரு நாள் சுய ஊரடங்கு ஒரு டீஸர் போல வைத்துக் கொள்வோமே?. அதன் பின்னர்தானே மெயின் பிக்சரே ஆரம்பிச்சுச்சு...


ஊரடங்கு 1.0 மார்ச் 25 முதல் - ஏப். 14 வரை - 21 நாட்கள்.
ஊரடங்கு 2.0 ஏப். 14 முதல் மே 3 வரை.

ஊரடங்கு 3.0 மே 3 முதல் மே 17 வரை.


சரி.. இந்த ஊரடங்குகளை நாம் சரியாக கடைபிடித்தோமா? என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தில் மதுரை, சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் அறிவித்த முழு ஊரடங்கு மட்டுமே முறையாகவும், சரியாகவும் அமல்படுத்தப்பட்டது. மற்றபடி தமிழகம் உட்பட இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கை முறையாக அமல்படுத்தவில்லை என்று மக்களும், மக்கள் சரியாக கடைபிடிக்கவில்லை என அரசுகளும் மாறி, மாறி குற்றம் சாட்டுகின்றன. மக்களை சரியாக வழிநடத்தவோ அல்லது அவர்களது அடிப்படை தேவைகளை முறையாக பின்பற்றாததே இதற்கு முக்கிய காரணம். சரி... ஒரு உதாரணத்திற்கு, பக்கத்துல இருக்கிற ஒரு நாடையும், ஒரு மாநிலத்தையும் எடுத்துக் கொள்ேவாமே?

சீனா என்ன செய்தது?
சீனாவை பொறுத்தவரை முதன்முதலாக நம்ம ஊர்ல சொல்றது போல, ‘மர்மக் காய்ச்சல்’ பரவுகிறதோ என்றுதான் முதலில் இந்த வைரஸ் தொற்றை மருத்துவர்கள் அணுகினர். தொடர்ந்து விஷவாயு தாக்கியவர்கள் போல, பலர் மூச்சுத்திணறி இறந்தபோதுதான், ‘சார்ஸ்’ போன்று ஒரு வைரஸ் சரசரவென பரவுகிறது என உணர்ந்தனர். அதன் தீவிரத்தை உணர்வதற்குள்ளே ஒன்றிரண்டு டாக்டர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ‘அடடா... ஆபத்தான நோயாக இருக்கும் போலயே...’ என்ற சுதாரித்த சீன அரசு முதல் ஊரடங்கை அதிரடியாக அறிவித்தது. பொதுவாக, பனிக்காற்று சீசனில் ஜன்னல், கதவுகளை கூட அடைத்துக் கொண்டு மக்கள் வீடுகளில் முடங்குவது அங்கு வழக்கமாம். ‘கொரோனா காற்றில் பரவுகிறது’ என்ற முதல்கட்ட ஆபத்தான தகவலால், மக்கள் தப்பித்தவறி கூட தங்கள் தலையை வெளியே காட்டவில்லையாம். காற்று கூட புக முடியாமல் வீட்டை அடைத்து, கப்சிப் ஆகி விட்டார்களாம். மேலும், முக்கிய தெருக்கள், சாலை பகுதிகளில் போலீசார் எந்நேரமும் முழு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், யாருமே விதி மீறி செல்ல விரும்பவில்லையாம்.

பொதுவாக, சீனாவில் உள்ளவர்கள் தங்களது உணவுத்தேவைகளுக்கான பொருட்களை கூடுதலாக வாங்கி, ஸ்டாக் வைப்பது வழக்கமாம். ஊரடங்கு நாள் அறிவிக்கப்பட்டபோதே, முறையான சமூக இடைவெளியுடன் பலர் பொருட்களை வாங்கி வைத்துக் கொண்டனராம். பலர் ‘இருப்பதை வைத்து சமாளிப்போம். இப்போதைக்கு நாம இருப்பதே பெரிய விஷயம்’ என்ற மனநிலைக்கு வந்து விட்டனராம். சீன அறிவிப்பின்படி 4,600க்கும் மேற்பட்டோர் பலியானதாக அறிவித்தாலும், இந்த பட்டியல் சரிதானா? முதல் பாதிப்புக்குள்ளான நாட்டில் எப்படி ஆயிரக்கணக்கில் மட்டும் உயிரிழப்பார்கள்? இது சாத்தியமா? லட்சக்கணக்கானோர் இறந்தனரா? வைரஸ் ஆய்வகத்தில் பரவியதா? விலங்குகள் சந்தையில் இருந்து பரவியதா என அமெரிக்காவுக்கு இருக்கும் சந்தேகம், அலங்காநல்லூர் வரை அனைவருக்கும் இருக்கிறது. ஊரடங்கின்போது மக்கள் தங்களது உத்தரவை மதித்ததால், பெரும் உயிரிழப்பை தவிர்த்தோம் என சீன அரசு மார் தட்டிக் கொள்வதில் தவறில்லை.
பக்கத்துல போவோமா...

அவ்வளவு தூரம் ஏங்க சீனாவுக்கு போகணும்... இதோ... அமெரிக்க பத்திரிகைகளே, அசந்து பாராட்டிய அண்டை மாநிலமான கேரளாவுல போய் விசாரிப்போம்... அங்கே எப்படி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தாங்கன்னு பார்க்கலாமா?
இந்தியாவில் முதல் பாதிப்பு ஜன. 20ல் கேரளாவில்தான் முதலில் தொடங்கியது. சீனாவில் இருந்து நர்சிங் கோர்ஸ் படித்த 3 மாணவிகள் கொரோனா பாதிப்புடன் கேரளா வந்திறங்கினர். உடனடியாக அம்மாநில அரசு தடுப்பு நடவடிக்கைகளில் அதிரடியாக இறங்கியது. சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வருவோரை, கண்டறிந்து தனிமைப்படுத்தியது. வெளிமாநிலங்களில் இருந்து வந்தோரையும், தனிமைப்படுத்தி அவர்களுக்கு வேண்டிய உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றியது. இதன்பின்னரே மத்திய அரசு சுதாரித்து, தனிமைப்படுத்துதலை துவங்கியது.

கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், தொடர்பில் உள்ளவர்களை பிடித்து தீவிர பரிசோதனை நடத்தியது. மேலும், ஊரடங்கை கடுமையாகவும் அமல்படுத்தியது. அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஒருவர் ஒரு மணிநேரத்துக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவார். தேவையில்லாமல் வாகனங்களில் செல்லக்கூடாது. திறக்க அனுமதித்த கடை வாசல், முக்கிய தெருக்கள், சாலைகளில் ஹேண்ட் வாஷ், சானிடைசரை வைக்க வேண்டும். கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வீட்டில் யாருக்காகவாவது தொண்டை தொற்று, காய்ச்சல் இருந்தால் உடனே  தகவல் தர வேண்டும். மேலும், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன்  இணைந்து அம்மாநில சுகாதாரத்துறை முழுவீச்சில் வீடுவீடாக களமிறங்கியது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால்தான் கேரளாவில் மார்ச்சை விட ஏப்ரல், அடுத்து மே என பாதிப்பு சதவீதம் குறைந்தவண்ணம் உள்ளது. மதுக்கடைகளை உடனடியாக மூடியது, ஏழை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தடையின்றி கிடைக்க செய்தது என களத்தில் தீயாய் இறங்கி வேலை பார்த்ததன் விளைவே அங்கு பாதிப்பு பெருமளவு குறைந்தது.
இங்கே எப்படி ?

தமிழகத்தில் முழு ஊரடங்கு நாட்களை தவிர, மற்ற நாட்களில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள், தியேட்டர்கள், மால்கள் அடைக்கப்பட்டதே தவிர, மக்களின் நடமாட்டம், பொதுவெளியில் நின்று பேசுவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, வெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளை சிலர் ‘வழக்கமாகவே’ ஈடுபட்டிருந்தனர். தமிழகத்தில் பரவல் அதிகமானதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். கோயம்பேடுவில் சமூக இடைவெளி, மாஸ்க் அணியாமல் கூடிய வியாபாரிகள், மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல... அதேநேரம் வீட்டை விட்டு வெளியேறாமல், ஊரடங்கை கடுமையாக கடைபிடித்தவர்களும் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். அதனால்தான் கேரளாவை போல மற்ற மாநிலங்களில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அரசுகள் திணறி வருகின்றன. ஊரடங்கு துவங்கும்போது சொற்ப எண்ணிக்கையில் இருந்த வைரஸ் பரவல், தளர்வுகள் துவங்கியதும் கிடுகிடுவென உயரத்தொடங்கியது. இதுவரை நடந்ததை மறப்போம். இனி வரும் 2, 3 மாதங்களாவது சமூக இடைவெளி, அடிக்கடி கை கழுவுதல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்போம். இதை ஒரு பெரும் பாடமாகவே கருதுவோம். ஆரோக்கிய மான சூழலை உருவாக்குவோம்.

இன்னும் சில மாசத்துக்கு இதை ஃபாலோ பண்ணுங்க...

கொரோனா பரவலால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது. அதைப்பற்றி பெரியதாக கவலைப்படாமல் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை, இப்போது மட்டுமல்ல... அடுத்த சில மாதங்கள் வரை நாம் கடைபிடிப்பது நல்லது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

*  கைகளை நன்றாக 20 வினாடிகள் வரை சோப் போட்டு கழுவ வேண்டும். மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்.
*  சமூக இடைவெளியை 1.50 - 2 மீ வரை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
*  கூட்டமான இடங்களை தவிர்ப்பது நல்லது.
* கை குலுக்குதல், நெருக்கமாக பழகுதலை தவிர்க்க வேண்டும்.
*  அவசியமல்லாத வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டும். பயணங்களின்போது கட்டாயம் ஹேண்ட் வாஷ், சானிடைசரை உடன் வைத்திருத்தல் நல்லது.
* குளிர்ந்த நீரை விட, இதமான வெந்நீரை பருகுவது மிகவும் நல்லது.
* அலுவலகமோ அல்லது வெளியே சென்று வீட்டுக்கு வரும்போது நன்றாக குளிக்க வேண்டும். அணிந்த ஆடைகளை சோப் ேபாட்டு நன்றாக துவைக்க வேண்டும்.

உனக்கு தண்டனை.. ஊருக்கு அது பாடம்.. உலக நாடுகளில் ஊரடங்கு எப்படி கடைபிடிக்கப்பட்டது என தெரிய விருப்பமா?
சிங்கப்பூரை பொறுத்தவரை அரசு உத்தரவை மதித்து நடப்போம். ஊரடங்கை அறிவித்தபோது, அத்தியாவசிய பொருட்களை வாங்கி அதிகளவு வைக்க வேண்டும் என்ற எண்ணம் பரவலாக இருந்தது. ஆனால், அரசு அத்தியவாசிய பொருட்கள் அனைவருக்கும், தேவையான அளவு உள்ளது. பயப்பட வேண்டாம் என தெரிவித்தது. மாஸ்க் அணிவது இங்கே கட்டாயம். அணியாதவர்கள், ஊரடங்கை மீறி சுற்றுபவர்களை கைது செய்து உரிய தண்டனையையும் வழங்கி வருகிறது அரசு. அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் மற்றவர்களுக்கு பாடமாக இருக்கும்படி செய்தனர். இதனால் மக்களும் தேவையில்லாமல் வெளியே செல்லவில்லை. வாரம் ஒரு முறை மட்டுமே வீட்டில் இருந்து வெளியே பொருட்களை வாங்கச் செல்கிறோம் என்கின்றனர் மக்கள்.

இடைவெளி இருந்தால் எல்லாமே கிடைக்கும் ஜெர்மனியில் எப்படி என விசாரித்தோம்...
கொரோனா பரவத்தொடங்கிய காலத்தில் மக்களிடையே ஒருவித அலட்சியப்போக்கு காணப்பட்டது. ‘நமக்கு எல்லாம் இது வராது’ - என்ற எண்ணம் பரவலாக இருந்தது. தீவிரமாக பரவத்தொடங்கியதும் அரசு எச்சரிக்க தொடங்கியது. பாதுகாப்பான மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் என்பதை தெரிவித்தது. பணியாட்களை கூட அனுமதிக்க தடை விதித்தது. படிப்படியாக குணமடைந்தோர் சதவீதம் அதிகரித்ததும், படிப்படியாக சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று, சமூக இடைவெளியை அனுசரித்து, வீட்டில் இருந்து ஒருவர் வாங்கி வரலாம். பெரும்பாலும் பணிக்கு செல்பவரே, அனைத்து பொருட்களையும் வாங்கி வருவதால் பிரச்னை பெரியதாக இல்லை.

அடிமைப்படுத்திய நாடு அரண்டு போய் கிடக்கிறது இன்று கொரோனா போல, ஒரு காலத்தில் நம்மை ஆட்டிப்படைத்த ஆங்கிலேய நாடு (பிரிட்டன்) நிலவரம் அறிவோமா?
இங்கிலாந்தை பொறுத்தவரை கொரோனா ஓவர் ஆட்டம் போட்ட நாடுகளுள் ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். சுமார் 2.50 லட்சம் பேர் வரை தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். பலியானோர் எண்ணிக்கை சதவீதம் அதிகரிப்பதால் மக்கள் அச்சத்துடனே உள்ளனர். இங்கு கடந்த மார்ச் 23ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட அரசின் முக்கிய அதிகாரிகள் கூட கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. பொழுதுபோக்கு இடங்கள், மால், தியேட்டர்கள், விளையாட்டு அரங்குகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சூப்பர் மார்க்கெட் மற்றும் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. ஒவ்வொருவராக மட்டுமே கடைக்கு சென்று குறிப்பிட்ட நேரத்துக்குள் சென்று பொருட்களை வாங்கி வர வேண்டும். அதன்பின்னரே அடுத்தவர் அனுமதிக்கப்படுவார். சமூக இடைவெளியை கொஞ்சம் ஜாஸ்தியாகவே விட்டுத்தான் மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். மக்கள் நடமாட்டம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் எப்படி நிலவரம்?
இலங்கையில் சீனாவில் இருந்து வந்த ஒரு பெண் சுற்றுலாப்பயணி மூலமே முதல் தொற்று உறுதியானது. இவர் குணமாகி சீனா சென்றதும், மார்ச் 11ம் தேதி சுற்றுலா கைடு பாதிக்கப்பட்டார். பின்னர் கடற்படையினர் மூலம் பரவ தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விதிமுறைகளுக்கு உட்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது. பின்னர் அதிக பாதிப்புடைய கொழும்பு கம்பஹா தவிர்த்து, ஏனைய மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. மக்கள் வெளியே செல்வதற்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. மேலும், ஊரடங்கு கடுமையாக்கப்பட்ட இடங்களில் அரசு சார்பில் மக்களுக்கு உணவு உட்பட அத்தியாவசிய உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் தவித்த இலங்கைவாசிகள் பத்திரமாக மீட்டு வரப்பட்டனர். இங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தவர்களும் உரிய வசதிகளுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். அரசு, தனியார் நிறுவனங்கள், குறைந்த எண்ணிக்கையான ஊழியர்களை கொண்டு இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இங்கு பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தொழிலான தேயிலை பறிக்கும் தொழில் உள்ளிட்ட சில தொழில்களில், பணியாளர்கள் சமூக இடைவெளியுடன் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், இலங்கையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.


Tags : world , Viral Infections, Why ,Curfew?
× RELATED தண்ணீரை விலை கொடுத்து வாங்குவது நூற்றாண்டின் மிகப்பெரும் அவலம்