×

கொரோனா ஊரடங்கால் பெரும் நஷ்டம் ஓசூர் ரோஜா ஏற்றுமதி முடங்கியது

* குப்பையில் வீசப்படும் வண்ணமலர்கள்
* 50 கோடி பாதிப்பால் விவசாயிகள் கண்ணீர்


ஓசூர்: கொரோனா ஊரடங்கால் ஓசூரில் ₹50 கோடி மதிப்பிலான ரோஜா மலர்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு ரக வண்ணமலர்கள் தினமும் குப்பையில் வீசப்படும் அவலம் தொடர்கிறது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டதோடு, அனைத்து  தொழில்களையும் முடக்கி உள்ளது. இதில் எளிய தொழில்கள் முதல் ஏற்றுமதி தொழில்வரை பாகுபாடு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பிரசித்தி பெற்ற ஓசூர் ரோஜாக்களின் ஏற்றுமதியானது தற்போதைய சூழலில் ₹50கோடி என்ற அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.  தமிழக-கர்நாடக எல்லை மாவட்டம் என்ற பெருமைக்குரியது கிருஷ்ணகிரி. இங்குள்ள ஓசூர் தொழில் நகரமாக விளங்குகிறது. அதே நேரத்தில் காய்கறிகள்,மலர்சாகுபடியிலும் சிறந்து விளங்குகிறது. குறிப்பாக ஓசூர்,பாகலூர்,பேரிகை,கெலமங்கலம்,தளி,தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் 2,000 ஏக்கர் பரப்பளவில் ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படுகிறது. காரனேசன், ஜெர்பரா, மேரி கோல்டு என்று வண்ணமயமாக காட்சியளிக்கும் இந்த மலர்கள் அனைத்தும் பசுமைக்குடில்கள் அமைக்கப்பட்டு அதில் வளர்க்கப்பட்டு வருகின்றன. நீண்ட காம்புகளுடன்  பிரம்மாண்டமாக வளர்க்கப்படும் ரோஜாக்கள்,வளைகுடா நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. குறிப்பாக காதலர் தின கொண்டாட்டங்களுக்கும், பல்வேறு விழாக்களுக்கும் இந்த நாடுகளில் ஓசூர் ரோஜாக்களே பிரதானமாக இடம் பெறுகிறது என்பது சிறப்பு. இதனால் ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மூலம் ஆண்டு தோறும்  பல கோடி ரூபாய் அளவிலான வர்த்தகம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் பூதமாய் கிளம்பிய கொரோனா வைரஸ் தொற்று, ரோஜாக்கள் ஏற்றுமதிக்கு அடியோடு உலை வைத்துள்ளது.இதர நாடுகளுக்கான விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். அதேபோல் சாலை போக்குவரத்து,ரயில் போக்குவரத்து போன்றவை நிறுத்தப்பட்டுள்ளதால் வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. மாவட்டம் வாரியான கட்டுப்பாடுகளால் உள்ளூர் சந்தைகளுக்கும் இந்த மலர்களை கொண்டு சென்று விற்க முடியாத நிலையே தொடர்கிறது. இதன் காரணமாக சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்களை தினமும் எரிப்பதும், குப்பையில் வீசுவதும் கடந்த 40 நாட்களாக தொடர்கதையாகி வருகிறது. பறிப்பதற்கும்,அதை பராமரிப்பதற்கும்,பேக்கிங் செய்து வைத்து பாதுகாப்பதற்கும் குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டும்.தற்போதைய சூழலில் அதற்கு வழியில்லாததால் கஷ்டப்பட்டு சாகுபடி செய்த மலர்களை மனவேதனையுடன் குப்பையில் வீசியும், தீயிட்டு அழித்தும் வருகிறோம்.இதன் காரணமாக ₹50 கோடி நஷ்டமாகியுள்ளது என்று கண்ணீருடன் தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

இதே போல் ரோஜாக்களை பாதுகாத்து வைப்பதற்கான குளிர்பதன கிடங்கும்  தற்போது மூடப்பட்டுள்ளது. அதை மீண்டும் இயக்க வேண்டும் என்றால் அதற்குரிய கேஸ், மற்றும் இயந்திர பாகங்களை புதியதாக அமைக்க வேண்டும். எனவே நடப்பாண்டு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை கண்டிப்பாக எங்களால் உடனடியாக ஈடு கட்ட முடியாது. எனவே மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அரசுக்கு பெருமளவில் அன்னிய செலவாணி ஈட்டித்தரும் ரோஜா ஏற்றுமதியானது எதிர்காலத்தில் தங்கு தடையின்றி நடப்பதற்கும் வழிவகுக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும்
சீக்கனபள்ளி கிராமத்தை சேர்ந்த மலர் உற்பத்தியாளரும், கிருஷ்ணகிரி மாவட்ட தோட்டக்கலை அமைப்பின் தலைவருமான வெங்கடாசலம் என்ற பாபு கூறுகையில், ‘‘இந்த மாவட்டத்தை சேர்ந்த மலர் சாகுபடி விவசாயிகள் ஏராளமான பணம் செலவு செய்து ரோஜா உள்ளிட்ட பல்வேறு மலர்களை சாகுபடி செய்கின்றனர்.விற்பனை இல்லாத நிலையிலும்,நாங்கள் தினமும் மலர்களை உற்பத்தி செய்ய வேண்டிய நிலை உள்ளது,இதனால் பராமரிப்பு செலவும் அதிகரித்து வருகிறது.எனவே எங்களின் பாதிப்பை நேரில் கண்டறிய,வல்லுனர் குழுவை அனுப்பி வைக்க வேண்டும்.உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.இதை வலியுறுத்தி மத்திய வேளாண் அமைச்சருக்கு கடிதமும் எழுதியுள்ளோம்,’’என்றார்.

காதலர் தினத்திற்கு மட்டும் 2கோடி ரோஜாக்கள் ஏற்றுமதி
தாஜ்மஹல்,நெப்ளஸ்,பர்ஸ்ட்ரெட்,கிரான்ட்காலா,பிங்க்,அவலான்ஸ் என்று 35வகை ரோஜாக்கள் ஓசூரில் சாகுபடி செய்யப்படுகிறது. வளைகுடா நாடுகளுக்கு மட்டுமன்றி மலேசியா,சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த ரோஜாக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.நடப்பாண்டு பிப்ரவரி 14ம்தேதி நடந்த  காதலர்தின கொண்டாட்டங்களுக்கு மட்டும் 2 கோடி ரோஜாக்கள் ஓசூரிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் மட்டும் இதை நம்பி 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். நூறுக்கும் மேற்பட்ட சாகுபடி பண்ணைகள் ஏற்றுமதியில் மும்முரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* ஓசூரில் 35 வகையான ரோஜாக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
* ஓசூர் ரோஜாக்கள் செழிப்புடனும், எப்போதும் பிரஷ் ஆகவும் இருக்கும்.
* ரோஜா மலர்களை தினமும் எரிப்பதும், குப்பையில் வீசுவதும் தொடர்கதையாகி வருகிறது



Tags : Corona ,loss ,Hosur , Coronation curtailing, loss , Hosur rose ,exports
× RELATED ஓசூர் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ