×

5 லட்சம் ஏழை பீடித்தொழிலாளர்கள்

*  இலை, தூள் கொண்டுவர அனுமதி இல்லை
* பெண் தொழிலாளர்களை கண்டு கொள்ளாத அரசு

தமிழகத்தில் கொரோனா காரணமாக பீடித் தொழில் முடங்கி கிடக்கும் சூழலில், 5 லட்சம் பீடித் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். பீடி நிறுவனங் களுக்கான வாகன போக்குவரத்தில் நிலவும் தடை காரணமாக தொழிலை நடத்த முடியாமல் நிறுவனங்களும் திண்டாடுகின்றன.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்திலும் ஊரடங்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மார்ச் மாதம் 24ம் தேதி தொடங்கிய ஊரடங்கு எப்போது முடியும் என யாருக்கும் தெரியாத நிலையில் உள்ளது. மே மாதம் ஊரடங்கில் சில தளர்வுகளை முன்னெடுத்த நிலையிலும், அது பீடித் தொழிலுக்கு சாதகமாக இல்லை. பீடித் தொழில் முடக்கத்தால் தமிழகத்தில் மட்டுமே சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். நெல்லை, தென்காசியில் மட்டுமே சுமார் 4 லட்சம் பீடி தொழிலாளர்கள் பட்டினியில் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. பீடித் தொழிலை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தும் லட்சக்கணக்கான குடும்பங்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளன. இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் இன்றி தமிழக அரசு தங்களை கைவிட்டு விட்டதாக பீடித் தொழிலாளர்கள் குமுறுகின்றனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு பல்வேறு தொழிற்சாலைகள் ஓரளவு தொழிலாளர்களுடன் இயங்க அரசு அனுமதி தந்த நிலையிலும், பீடி கம்பெனிகள் தொய்வின்றி இயங்க இதுவரை எவ்வித அனுமதியும் தமிழக அரசாலும், மாவட்ட நிர்வாகங்களாலும் வழங்கப்படவில்லை.

தமிழக அரசு வருவாய் அடிப்படையில் மதுபான கடைகளை திறக்க காட்டும் அக்கறையை பீடித் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற காட்டவில்லை. பீடி சுற்றும் தொழில் என்பது அவரவர் வீட்டில் இருந்தே செய்யும் தொழிலாகும். இதில் கொரோனா நோய் பரவல் மற்றும் நோய் தொற்றுக்கான வாய்ப்புகள் மிக குறைவு. தொழிலாளர்களுக்கு தேவையான பீடி இலை, தூள் போன்ற மூலப்பொருட்கள் கிடைத்திட அரசு வழிவகை செய்தாலே போதும். பீடித் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் பீடிகள் சுற்றினால் ரூ.150 வரை கூலியும், டி.ஏ. வகையில் ரூ.50ம் கிடைக்க வாய்ப்புண்டு. பீடித் தொழிலாளர்களுக்கு வார சம்பளம் அடிப்படையில் ரூ.1300 வரை கிடைப்பது வழக்கம். ஆனால் கொரோனா ஊரடங்கு போடப்பட்ட நாளில் இருந்தே பீடித் தொழிலாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையிலான உறவு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு விட்டது. பீடி நிறுவனங்களை பொறுத்தவரை அவர்களுக்குரிய மூலப் பொருட்களான இலை மற்றும் புகையிலை தூள் ஆகியவை வெளி மாநிலங்களில் இருந்தே கொண்டு வரப்படும். பீடி சுற்றுவதற்கு பயன்படும் தெந்து இலைகள் தமிழகத்தில் கிடைப்பதில்லை. இவை மத்திய பிரதேசத்தில் இருந்து அதிகமாக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது. பீகார், உ.பி. சத்தீஸ்கர், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பீடி இலைகள் தமிழகம் வருகின்றன.

 வாகன போக்குவரத்து இல்லாத காரணத்தால் அவற்றை கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளன. அத்தியாவசிய பொருள் இல்லை என்பதை காரணம் காட்டி பீடி நிறுவனங்களின் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விடுகின்றன. இதனால் பீடி நிறுவனங்கள் மூலப்பொருட்களை தொழிலாளர்களுக்கு வழங்க இயலாத நிலையில் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் மேலப்பாளையத்தில் மட்டுமே சுமார் 20 பீடி நிறுவனங்கள் உள்ள நிலையில், அவற்றின் செயல்பாடுகள் முடங்கி கிடக்கின்றன. பீடி நிறுவனங்களுக்கு தலைமையிடம் என ஒன்று இருந்தாலும், அங்கிருந்து கிளைகளுக்கு மூலப்பொருட்கள் சப்ளை செய்யப்படும். அவ்வாறு வாகனங்களை இயக்குவதிலும் பீடி நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றன. இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு பீடி கம்பெனியும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு தங்களது பீடிகளை விற்பனைக்கு அனுப்புவதுண்டு. அதற்கும் தற்போது வழியில்லை. இதனால் பீடி ெதாழிலே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது.தமிழகத்தின் பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் இ - பாஸ் பெற்றிட பீடி நிறுவனங்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தன. ஆனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகையிலை பொருட்களுக்கு அரசு இதுவரை அனுமதி தரவில்லை என்று பதில் தரப்படுகிறது.

ஊரடங்கு காலக்கட்டத்தில் கள்ளச் சாராயம், கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிகரித்தன. பீடி சுற்றும் தொழில் என்பது சட்ட விரோத செயல் இல்லை. இதற்கு முறையாக அரசு தரப்பில் அனுமதி பாஸ் அளிக்கப்பட்டால் மூலப் பொருட்களை கொண்டு வருதில் எவ்வித பிரச்னையும் இருக்காது. இதுகுறித்து பீடி சுற்றும் தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த மேலப்பாளையம் ஹம்சா முகைதீன் கூறுகையில், ‘‘கொரோனா பரவல் காரணமாக அரசு பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு காரணமாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டங்களில் மட்டுமே சுமார் 4 லட்சம் பீடி தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி திண்டாடுகின்றனர். பீடி இலை, பீடி தூள் போன்ற மூலப் பொருட்கள் மத்திய பிரதேசத்திலிருந்து தான் இங்கு அதிகம் வருகின்றன.

ஊரடங்கு காரணமாக மாநிலங்களுக்கிடையே போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டதால் மூலப் பொருட்கள் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. தமிழகத்தில் கையிருப்பில் உள்ள மூலப்பொருட்களை ஏஜென்டுகள் மூலம் பீடித் தொழிலாளர்களுக்கு கொண்டு கொடுக்கவும் இதுவரை முறையான அனுமதி கிடைக்கவில்லை. வாகன அனுமதிச் சீட்டு கேட்டு விண்ணப்பித்தால் புகையிலை பொருட்களுக்கு அனுமதி கிடையாது என ரத்து செய்து விடுகின்றனர். அரசு வாய்மொழியாக பீடி தொழிற்சாலைகள் இயங்கலாம் என்று உத்தரவு அளித்துவிட்டு மூலப் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்காதது வேதனையளிக்கிறது.  கடந்த 50 தினங்களாக பீடித் தொழில் முடங்கி கிடப்பதால் பீடித் தொழிலாளர்கள் பசி, பட்டினிக்கு ஆளாகி வருகின்றனர். பீடித் தொழிலாளர்களின் குடும்பங்கள் அன்றாட செலவுக்கு வழியின்றி திண்டாடுகின்றன. அரசு சார்பில் எவ்வித நிவாரணமும் அவர்களுக்கு இல்லை. மாவட்ட நிர்வாகங்கள் பீடி கம்பெனி உரிமையாளர்கள், தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றார்.

தமிழகத்தில் திட்டங்களே இல்லை
பீடித் தொழிலாளர்களுக்கு மற்ற மாநிலங்களில் வழங்கப்படுகிற சலுகைகள் தமிழகத்தில் வழங்கப்படுவதில்லை என்பதும் பெருங்குறை. மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பீடிக்கான தெந்து இலை பறிப்பவர்களுக்கு அம்மாநில அரசே ஊதியம் வழங்குகிறது. பீடித் தொழிலாளர்கள் நலனுக்காக கேரள அரசு ஒரு காலகட்டத்தில் கூட்டுறவு அமைப்பையே உருவாக்கி கொடுத்தது. ஆனால் தமிழகத்தில் பீடித் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கும் திட்டங்களோ, முறைப்படுத்தும் நடைமுறைகளோ இன்று வரை இல்லை. பீடி சுற்றினால் வருமானம், இல்லையென்றால் பட்டினி என்ற அவல நிலையே தொடர்கிறது.  

மூலப்பொருட்கள் கிடைப்பதில் தாமதம்
பீடி தொழிலில் உள்ள ஊரடங்கு பிரச்னைகள் குறித்து பீடி நிறுவனங்களின் நிர்வாக தரப்பில் கேட்டபோது, ‘‘மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து பீடி இலையும், கர்நாடகா, சட்டீஸ்கர் மாநிலங்களில் இருந்து புகையிலையும் வர வேண்டும். கடந்த 50 தினங்களாக மூலப்பொருட்கள் முறையாக வந்து சேரவில்லை. ஊரடங்கிற்கு முன்பு மூலப்பொருட்களை ஏற்றி வந்த லாரிகள் இன்னமும் சில இடங்களில் அப்படியே நிற்கின்றன.
சில நிறுவனங்கள் மட்டுமே குடோனில் பீடிக்கான மூலப்பொருட்களை இருப்பு வைத்துள்ளன. குடோனில் உள்ள மூலப்பொருட்களை பக்கத்து மாவட்ட பீடி தொழிலாளர்களுக்கு அனுப்பக்கூட முடியவில்லை. குறிப்பாக நெல்லை தலைமை நிறுவனத்தில் இருந்து  தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளுக்கு பீடி சுற்ற இலை, தூள் கொண்டு செல்ல முடியவில்லை. அந்த வாகனங்கள் போலீஸ் செக்போஸ்டில் தடுத்து நிறுத்தப்படுகின்றன. 3ம் கட்டத்தில் ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் இப்போது மட்டும் நிலைமை பரவாயில்லை. சில நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு 50 சதவீதம் போனஸ் வழங்கின. ஊரடங்கு காலக்கட்டத்தில் பொருளாதார நெருக்கடி என்பது பீடி நிறுவனங்களுக்கும் பொருந்தும்’’ என்றனர்.

மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரணம்

தமிழ்நாடு பீடித் தொழிலாளர்கள் சம்மேளன கவுரவ தலைவர் ராஜாங்கம் கூறுகையில், ‘‘ சமூகத்தின் அடித்தட்டு மக்கள் பீடித் தொழிலை குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். பீடித் தொழிலாளர்களுக்கு மாதம் தோறும் ரூ.6 ஆயிரம் வரை வருமானம் கிடைத்து வந்தது. ஊரடங்கு காரணமாக வாரச்சம்பளம், மாதச்சம்பளம் பெறுவோர் வழியின்றி திண்டாடுகின்றனர். பீடி சுற்றும் பெண்களுக்கு கணவன்மார்களின் வருமானம் இருந்தாலாவது ஓரளவுக்கு குடும்பத்தை காப்பாற்ற முடியும். ஊரடங்கில் கணவன், மனைவி இருவருக்குமே வருமானம் இல்லாததால், குடும்பமே பட்டினி கிடக்கிறது. நிதியமைச்சரின் சமீபத்திய அறிவிப்புகள் பெருந்தொழில்களுக்கு சாதகமாகவே உள்ளன. பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு உதவிட மத்திய, மாநில அரசுகளிடம் மாற்றுத் திட்டங்களும் இல்லை. பீடித் தொழிலாளர்களுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக மாதத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும். புகையிலையோடு போராடும் பீடித் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மருத்துவ வசதிகளை வருங்காலத்திலாவது அரசு தர வேண்டும்’’ என்றார்.

தமிழகமும்
பீடியும்...
தமிழகம் முழுவதும் சுமார் 80 பீடி உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் முன்பு 50 லட்சம் பீடிகள் தினமும் உற்பத்தி செய்யப்பட்டன. இதுதவிர 500க்கும் மேற்பட்ட சிறு பீடி உற்பத்தி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 3 லட்சம் வரையிலான பீடிகள் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. தமிழகத்தில் ஒரு ஆண்டிற்கு 3 ஆயிரம் கோடி வரை பீடிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நாகரிக வளர்ச்சி காரணமாக பீடி குடிப்போரின் எண்ணிக்கை குறைய, குறைய உற்பத்தியும் குறைந்து வருகிறது. தமிழகத்தில் பீடித் தொழிலில் ஈடுபட்டு வரும் 5 லட்சம் பேரில் 90 சதவீதம் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பெண்களிலும் நிரந்தர பீடி சுற்றும் தொழிலாளர்களும், பகுதி நேர தொழிலாளர்களும் உண்டு.

கந்துவட்டி பிரச்னை
பீடித் தொழிலாளர்களோடு கந்துவட்டி பிரச்னையும் இரண்டற கலந்தது. நெல்லை, தென்காசி, வேலூர், கன்னியாகுமரி, ஈரோடு, சென்னை, திருவள்ளூர், திருச்சி, தர்மபுரி, தூத்துக்குடி, கடலூர் உள்ளிட்ட பீடித் தொழிலாளர்கள் அதிகமுள்ள மாவட்டங்களில் தொழிலாளர்கள் தற்போது உணவின்றி தவிக்கின்றனர். பீடித் ெதாழிலில் அடிக்கடி கந்துவட்டிக்கு கடன் வாங்கும் பழக்கமுள்ள தொழிலாளர்கள், தற்போது வறுமையின் காரணமாக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மேலும், மேலும் கடனாளிகளாக மாறுகின்றனர். சுயஉதவிக்குழுக்கள் மூலம் ஏற்கனவே வங்கியில் கடன் வாங்கியவர்கள் அதை கட்ட முடியாமலும் திண்டாடுகின்றனர்.

முற்றிலுமாக முடங்கியது
மத்திய அரசு புகைபிடிக்க தடை சட்டம் கொண்டு வந்த நாளில் இருந்த பீடி சுற்றும் தொழில் ஓரளவுக்கு சரிவை எதிர்கொண்டது. மத்திய அரசின் ஜிஎஸ்டி வரிவிதிப்பு மற்றொரு சறுக்கல். இதையெல்லாம் தாண்டி கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கு தொழிலை முற்றிலுமாக முடக்கிவிட்டதாக பீடித் தொழிலாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர். பீடித் தொழிலில் ஈடுபடும் பெண்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் பீடிகள் சுற்றினால் ரூ.150 வரை கூலியும், டி.ஏ. வகையில் ரூ.50ம் கிடைக்க வாய்ப்புண்டு. பீடித் தொழிலாளர்களுக்கு வார சம்பளம் அடிப்படையில் ரூ.1300 வரை கிடைப்பது வழக்கம்.

Tags : teachers , 5 lakh poorer teachers
× RELATED பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம்