×

வெறிச்சோடிய மதுக்கடைகள்: மாநில எல்லையில் சரக்கு விற்பனை டல்

ஓசூர்: மாநில எல்லையான ஓசூர் பகுதியில் மதுக்கடைகள் வெறிச்சோடிய நிலையில், சரக்கு விற்பனை டல் அடித்தது. தமிழகத்தில் டாஸ்மாக் கடை திறக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, நேற்று நாடு முழுவதும் மதுபானம் விற்பனை தொடங்கியது. இதற்காக பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும், சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டும், முகக்கவசம் அணியாமலும் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு மது பாட்டில்களை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால், விற்பனை சூடுபிடித்தது. ஆனால், மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.
குறிப்பாக மாநில எல்லையான ஓசூரில் உள்ள அனைத்து மதுக்கடைகளிலும் விற்பனை டல் அடித்தது. கடையை திறந்து ஊழியர்கள் காத்திருந்த போதும், குடிமகன்கள் யாரும் வந்தபாடில்லை. ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 10 பேர் என்ற அளவிலேயே வந்தனர். அதுவும் குறைந்த அளவிலேயே மதுபாட்டில்களை வாங்கிச் சென்றதால், ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், ‘ஓசூருக்கு மிக அருகில் கர்நாடக மாநிலம் அமைந்துள்ளதால், தமிழக எல்லை பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த கடைகளில் மது வாங்கி குடித்து வருகின்றனர். இதனால், ஓசூர் பகுதியில் பெரும்பாலான கடைகளில் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. குடிமகன்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது,’ என்றனர். போச்சம்பள்ளி: மாவட்ட எல்லையில் உள்ள போச்சம்பள்ளி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 டாஸ்மாக் கடைகள் உள்ளன. நேற்று காலை 10 மணிக்கே அனைத்து கடைகளும் போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு  கூட்டம் இல்லை. ஒரு சிலரே பொறுப்பாக வந்து சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த ஊரடங்கு உத்தரவால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானத்திற்கு வழியின்றி தவித்து வருவதால், டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குறைந்துள்ளதாக குடிமகன்கள் தெரிவித்தனர்.

Tags : liquor stores ,state border , Dumped liquor stores,Delivery, state border
× RELATED நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு எல்லையில் வாகன தணிக்கை தீவிரம்