×

உலகம் முழுவதும் சிறப்பு பெற்ற நாச்சியார்கோயில் குத்துவிளக்குகள் ஊரடங்கால் பல கோடி தேக்கம்

* வாழ்வாதாரத்தை தொலைத்த தொழிலாளர்கள்
* வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியுமா என கேள்விக்குறி

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ துாரத்தில் நாச்சியார்கோயில் உள்ளது. பலநுாறு ஆண்டுகளாக இந்த பகுதியில் குத்துவிளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. புகழ்பெற்ற பித்தளை குத்துவிளக்கு தயார் செய்வதற்கு நாச்சியார் கோயில் கரையோரம் உள்ள வேப்பங்குளம் மற்றும் அரசலாற்றின் படுகை மண் மிகவும் உகந்ததாகும். 250 கிலோ பித்தளையும், 50 கிலோ செம்பினை காய்ச்சினால் 1 அடி குத்து விளக்கு 90 எண்ணிக்கையும், 6 அடி விளக்கு 6 எண்ணிக்கையும் செய்ய முடியும். சாதாரணமாக ஒரு விளக்கு செய்ய குறைந்தது ஒரு வாரம் ஆகும். பித்தளை குத்துவிளக்கு கிலோ ரூ.750க்கு விற்பனை செய்யப்படுகிறது. உலகம் முழுவதும் சிறப்பு பெற்ற நாச்சியார் கோயில் பித்தளை குத்து விளக்குகளை, கும்பகோணம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாங்காமல் செல்ல மாட்டார்கள். இதுதவிர அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கொரோனா ஊரடங்கால் குத்து விளக்குகள் தயாரிக்க முடியாமலும், தயாரித்த விளக்குகளை ஏற்றுமதி செய்ய முடியாமல் கிடப்பில் உள்ளன. ஒருநாளைக்கு ரூ.1கோடி வரை குத்துவிளக்குகள் விற்பனை நடந்து வந்த நிலையில்,கடந்த 50 நாட்களுக்கு மேலாக தொழில் முடங்கியதால் பல கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலுள்ள குத்து விளக்குகளும் அப்படியே தேங்கி கிடக்கின்றது. இந்த தொழிலை நம்பி 500 பட்டறைகள், நேரிடையாக 10ஆயிரம் தொழிலாளர்கள், 5ஆயிரம் மறைமுக தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். குத்து விளக்கு பட்டறைகள் மூடப்பட்டு இருப்பதால் அனைத்து தொழிலாளர்களும் வாழ்வாதாரமின்றி பசி, பட்டினியால் வாழ்ந்து வருகின்றனர். இது குறித்து குத்துவிளக்கு பட்டறை உரிமையாளர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், ஊரடங்குக்கு முன்பு குத்து விளக்கு பட்டறை தொழிலாளர்களுக்கும், விற்பனையாளர்களுக்கும் கூலி உயர்வு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் பட்டறைகள் மூடப்பட்டன. இதே போல் வருடந்தோறும் பிரச்சனை ஏற்படுவதால் வருடத்திற்கு 3 மாதங்கள் வேலையில்லாமல் கஷ்டப்படும் நிலை ஏற்படும். இதனால் பெரும்பாலான பட்டறை தொழிலாளர்கள், மாற்று தொழிலுக்கும் சென்று விட்டனர்.

ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக பட்டறைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். போதுமான வருமானமின்றியும், குடும்பத்தை நடத்துவதற்கு போதுமான வருமானமில்லாததால் பட்டறை தொழிலாளர்கள், உரிமையாளர்களிடம் கடன் வாங்கி அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். தடை உத்தரவு முடிந்தவுடன் 24 மணி நேரமும் வேலை செய்தாலும், தொழிலாளர்கள் வாங்கிய கடனை திருப்ப செலுத்த முடியுமா என கேள்விக்குறியாக உள்ளது. இது போன்ற அவல நிலையால் பட்டறை தொழிலாளர்களின் திருமணங்கள், சுபகாரியங்கள் நடை பெற குறைந்தது ஒரு வருடத்திற்கு மேலாகும் என்பது நிதர்சனமான உண்மையாகும். மத்திய, மாநில அரசுகள் குத்து விளக்கு பட்டறை தொழிலாளர்களுக்கு எந்த விதமான நிவாரண பொருட்களும், நிதியுதவியும் வழங்காதது வேதனையான செயலாகும். தொடர்ந்து ஊரடங்கு நாட்கள் நீடித்தால் குத்து விளக்கு பட்டறை தொழிலாளர்கள் நிலை கேள்வி குறியாகும். எனவே மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கும்பகோணம் நாச்சியார்கோயிலில் தயாரிக்கப்பட்ட 3 அடி உயரமும், 15 கிலோ எடையும் கொண்ட 108 சகலிமூக்கு அமைப்புடன் 4 கிளை, 5 கரனை, அடியில் ஒரு தட்டுடன் விளக்கின் மேல் அன்னப்பறவை பொருத்தப்பட்ட அஷ்டோத்தர அன்னம் விளக்கை கடந்தாண்டு சென்னை மாமல்லபுரத்திற்கு வந்த சீனஅதிபருக்கு, பிரதமர் மோடி நினைவு பரிசாக வழங்கினார். இதனால் உலகம் முழுவதும் நாச்சியார்கோயில் குத்து விளக்கு மேலும் சிறப்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Worldwide specialty,Nachiyarkoil, bombings, curtains are many crores
× RELATED திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார்...