×

மதுவுக்கு அடிமையாகி தடம் மாறும் சிறுவர்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?

தொண்டி: தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றுவட்டாரத்தில் சிறுவர்கள் தற்போது டூவீலர்களை அதிவேகமாக ஓட்டுவது, பிரச்னைகளில் ஈடுபடுவது மதுபோதைக்கு அடிமையாகி வருவது என சிறுவர்கள் தடம் மாறி வருகின்றனர். இதனை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப செல்போன்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ளது. வீட்டிற்கு இரண்டு முதல் மூன்று செல்போன்கள் உள்ளது. இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அனைவரும் தனித்தனியாக செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். பேசுவதற்கு மட்டும் பயன்பட்டு வந்த செல்போன் தற்போது கல்வி, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு பயன்படும் விதமாக மாறி உள்ளது. இதனால் சிறுவர்களும் பெண்களும் இதன் பயன்பாட்டில் அடிமையாகி உள்ளனர். தேவைக்கு மட்டும் பயன்படுத்தாமல் தேவையில்லாமல் பயன்படுத்தி வாழ்வையும் இழக்கின்றனர். சிறுவர்கள் எப்போது பார்த்தாலும் செல்போனை எடுத்துக்கொண்டு மறைவான இடங்களுக்கு சென்று வேறுவிதமான படம் பார்க்கின்றனர். இது அவர்களிடம் ஒருவித வக்கிரத்தை ஏற்படுத்துகிறது. மேலும் தன்னை ஒரு ஹீரோவாக நினைத்துக் கொண்டு அதிவேகமாக டூவீலர் ஓட்டுவது, டிக் டாக் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.

உச்சகட்டமாக மதுபானம் அருந்தி மயங்கியும் கிடக்கின்றனர். பெண்களின் நிலை இதைவிட மோசமாக மாறி விட்டது, பேஸ்புக், வாட்ஸ்ஆப், டிக் டாக் என தங்கள் வாழ்வை பாழ்படுத்திக் கொள்கின்றனர். செல்போன் பயன்பாட்டால் அதிகம் தீமைகள் மட்டுமே விளைகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளி மாணவர்கள் கடந்த காலங்களில் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் இருந்தனர். அதனால் சமூகத்தில் ஓரளவு குற்ற நிகழ்வுகள் குறைவாக இருந்தது. தற்போது ஆசிரியர்கள் மாணவர்களை திட்டினாலும் ஆசிரியர்களுக்கு பிரச்னை ஏற்படுவதால் அவர்களும் கை கட்டி நிற்பதால் சமூகம் சீரழிவை எதிர் நோக்கி செல்கிறது. மிகப்பெரிய குற்றங்களில் சிறுவர்கள் ஈடுபட்டிருப்பது வருங்கால சமுதாயத்தை நிலைகுலைய செய்யும் விதமாக உள்ளது. சமூக ஆர்வலர் சாதிக் பாட்சா கூறியது, நாளைய சமுதாயம் இளைஞர்கள் கையில் என்பார்கள். ஆனால் இன்றைய இளைஞர்கள் மது, போதை மற்றும் செல்போனுக்கு அடிமையாகியுள்ளனர்.

போதைக்கு அடிமையாகி குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் சிறுவர்கள் மதுபானம் அருந்துவதாக தெரிகிறது. இதை பெற்றோர்கள் கவனத்தில் கொண்டு தடுக்க வேண்டும். மாலை நேரங்களில் சிறுவர்கள் இருளான பகுதியில் கையில் செல்போனுடன் அமைர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. முடிந்தளவு சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் தேவைகள் தவிர்த்து செல்போன் பயன்பாட்டை தடுத்தால் குற்ற நிகழ்வுகளை தடுத்து விடலாம். மேலும் இவர்களுக்கு வாழ்வின் மகத்துவம் பற்றி அறிந்து கொள்ளும் விதமாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய வேண்டும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி அதிக நேரம் செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். டிக் டாக் செய்வது உள்ளிட்ட தேவையில்லாத செயல்களில் ஈடுபடுகின்றனர். குடும்ப பெண்கள் உட்பட சிறுவர்கள் வரை சீரழிவை நோக்கி செல்கின்றனர். இதை தடுக்க வேண்டும் என்றார்.

Tags : Boys , Boys,addicted to alcohol,change, Awareness
× RELATED காட்டுமன்னார்கோயில் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு