×

பவானிசாகரில் சூறாவளிக்காற்றுக்கு மரம் விழுந்து 2 வீடுகள் சேதம்

சத்தியமங்கலம்:  பவானிசாகரில் வீசிய பலத்த சூறாவளிக்காற்றால் மரம் முறிந்து விழுந்து 2 வீடுகள் சேதமடைந்தன. ஈரோடு  மாவட்டம் பவானிசாகர் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான  குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பல்வேறு துறையில் பணிபுரியும்  பணியாளர்கள் வசித்து வருகின்றனர். குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில்  ஏராளமான மரங்கள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பவானிசாகர்  பகுதியில் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. காற்றின் வேகம் தாங்காமல்  பவானிசாகர் பொதுப்பணித்துறை குடியிருப்பில் வசித்துவரும் மயில்சாமி, வீணா  ஆகிய இருவர் குடியிருந்த வீடுகளின் மீது பழமை வாய்ந்த மரம் வேருடன்  சாய்ந்து விழுந்ததில் வீட்டின் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது.

இதன்  காரணமாக வீடு முழுவதும் இடிந்து சிதறிக்கிடக்கிறது. மேலும் அரசு  மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்த மரம் முறிந்து சுற்றுச்சுவர் மீது  விழுந்தது. பவானிசாகர் பகுதி முழுவதும் மின்கம்பங்களில் மின் கம்பிகள்  அறுந்து விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. சூறாவளிக்காற்று  காரணமாக பவானிசாகர் சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த 2  ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. சேதமடைந்த  வீடுகள் மற்றும் வாழைமரங்களை பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரன்  பார்வையிட்டார்.

Tags : houses ,hurricane , 2 houses,damaged , hurricane falls, Bhawanisagar
× RELATED சூறாவளியால் வாழை சேதம்; அரசு நிவாரணம்...