×

ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய 50 ஆயிரம் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல்: 2 பேர் கைது

சென்னை: ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய 50 மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்து, இரண்டு பேரை கைது செய்தனர்.
ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து மதுபானங்களை தமிழகத்திற்கு காரில் கடத்தி வருவதாக திருவள்ளூர் எஸ்.பி.அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் எஸ்.ஐ. ராக்கிகுமாரி மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த ஒரு காரை சோதனை செய்தனர். அதில், ஆந்திர மாநில மலிவு விலை மதுபானங்கள் இருப்பது தெரிந்தது. பின்னர் அந்த காரையும் அதில் இருந்த மதுபானங்கள் மற்றும் 2 பேரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை திருவொற்றியூரை சேர்ந்த மில்டன் (34). சதீஷ்குமார் (35) என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலம் புத்தூர் அடுத்த நாராயணவனம் பகுதியில் உள்ள மதுபானக்கடையில் இருந்து மதுபானம் வாங்கியது தெரியவந்தது. இந்த மதுபானங்களின் மதிப்பு ₹50 ஆயிரம் என தெரியவந்தது. தொடர்ந்து காரை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடி மற்றும் வெங்கல் அருகே மூலக்கரை ஆகிய பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, ஆந்திராவில் இருந்து வந்த ஒரு பைக்கை சோதனை செய்தனர். அதில் ஆந்திர மாநில மதுபானங்கள் இருப்பது தெரிந்தது. இது சம்மந்தமாக பூண்டி பகுதியை சேர்ந்த பிரதாப் (36) என்பவரை கைது செய்தனர். இதேபோல், ஆந்திராவில் இருந்து மதுபானம் கடத்திய  செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் பகுதியை சேர்ந்த கிஷோர் (20) என்பவரை கைது செய்தனர்.

₹50 லட்சம் குட்கா சிக்கியது
கொடுங்கையூர் நுண்ணறிவு பிரிவு காவலர் தேவகுமார் நேற்று காலை கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகரில் ரோந்து சென்றபோது, ஒரு மினி வேனில் இருந்து மூட்டைகள் இறக்கப்பட்டு, அருகில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சென்று விசாரித்தபோது, அங்கிருந்தவர்கள் திடீரென ஓட்டம் பிடித்தனர். அந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில், போலீசார் அங்கு சென்று, ஒரு டன் எடையுள்ள குட்கா பொருட்கள் மற்றும் வேனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ₹50 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, ராயபுரம் முனுசாமி தோட்டத்தை சேர்ந்த குமரேசன் (54) என்பரை கைது செய்தனர். விசாரணையில், பெங்களூருவில் குட்கா பொருட்களை கடத்தி வந்து, வட சென்னையில் பல இடங்களிலும் அதிக விலைக்கு விற்று வந்தது தெரிந்தது. இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags : Andhra Pradesh , Andhra Pradesh seizure of liquor, 2 arrested
× RELATED ஆந்திராவில் ஓட்டலில் கேஸ் கசிவால் தீ : மாணவி பலி