×

சொந்த ஊர் செல்வதற்காக நடந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் மீது போலீஸ் தடியடி: எண்ணூரில் பரபரப்பு

சென்னை: நடந்தே சொந்த ஊர் செல்ல முயன்ற வடமாநில தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இச்சம்பவம் எண்ணூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இவர்கள் வேலை இழந்து தவித்தனர். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களும் இவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய உதவிகளை செய்யவில்லை.இதில் பல வட மாநில தொழிலாளர்களில் குடும்பத்துடன் வசித்து வருவதால், அவர்கள் மட்டுமின்றி, அவர்களின் மனைவி மற்றும் குழந்தைகளும் உணவு, பால் கிடைக்காமல், மற்றும் அன்றாட செலவுக்கு கூட பெரும் சிரமப்படுகின்றனர்.

எனவே, தங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் அல்லது தங்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டும் என்று இவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு வட மாநில தொழிலாளர்களை அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப அரசு திட்டமிட்டு, அதற்கான சிறப்பு ரயிலை குறிப்பிட்ட நாட்களில் இயக்கி வருகிறது. மேலும், பிற மாநிலங்களிலிருந்து இங்கு வரும் ரயில்களிலும் வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

ஆனால், குறைவான அளவே ரயில்கள் இயக்கப்படுவதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அனைவரையும் சொந்த ஊருக்கு முழுமையாக அனுப்புவதற்கு பல நாட்கள் ஆகும் என்று தெரிகிறது. இதனால் முன்பதிவு செய்துவிட்டு ஏராளமானோர் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் சென்னை அடுத்த மீஞ்சூர், அத்திப்பட்டு, மணலி புதுநகர், காட்டுப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர்.ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்து தவிக்கும் இவர்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என கூறப்படுகிறது.

இதனால், மீஞ்சூர் காட்டுப்பள்ளியில் இருந்து 300க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் நேற்று காலை தங்களது உடமைகளுடன் எண்ணூர் முகத்துவார மேம்பாலம் வழியாக சென்ட்ரல் நோக்கி நடந்தே சென்றனர். எண்ணூர் அருகே அவர்களை மறித்த எண்ணூர் போலீசார், பயண முன்பதிவு மற்றும் உரிய அனுமதியின்றி சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நடந்து செல்ல கூடாது என அறிவுறுத்தினர். இதனால் அதிருப்தி அடைந்த வடமாநில தொழிலாளர்கள் போலீசாரை சூழ்ந்து கோஷமிட்டனர். அவர்களை கலைந்து, தங்கியிருந்த குடியிருப்புக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியும், அதை மீறி சென்ட்ரல் நோக்கி செல்ல முயன்றனர்.

இதனால், போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும், விரட்டி விரட்டி சென்று லத்தியால் தாக்கினர். அப்போது, சிதறி ஓடிய தொழிலாளர்கள் பலர் தடுமாறி விழுந்ததால் காயமடைந்தனர். பலர் தங்களது உடமைகளை அப்டியே போட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று ஓடினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர், தொழிலாளர்கள் அனைவரும் தங்களது குடியிருப்புகளுக்கு திரும்பினர். சொந்த ஊர் செல்ல முயன்ற தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



Tags : home Police ,state workers ,Northern ,home , Hometown, Northern Territory Workers, Police Staff, Ennore,
× RELATED வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு...