×

ரயில், பஸ் போக்குவரத்தை தொடங்காவிட்டால் தனியார், அரசு அலுவலகம்இயங்குவதில் சிக்கல்: சொந்த ஊரில் இருந்து திரும்ப முடியாமல் அவதி

சென்னை: சென்னை உள்ளிட்ட நகரங்களில் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளதால் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சிக்கியுள்ள தனியார் நிறுவன ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த 3ம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. சென்னை, திருச்சி உட்பட பெரு நகரங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் 33 சதவீத பணியாளர்களுடன் மீண்டும் பணிகளை தொடங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்தநிலையில், ஊரடங்கு உத்தரவு ஆரம்பித்த போது தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

தற்போது, தனியார் நிறுவனங்கள் தொழில்களை தொடங்க அரசு அனுமதி அளித்தாலும் உள்ளூர் பேருந்து, ரயில் மற்றும் விமான சேவைகள் இன்னும் தொடங்காததால் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்புவதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர்கள் கூறியதாவது: மார்ச் 24ம் தேதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதே சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து நாங்கள் சொந்த ஊர்களுக்கு வந்துவிட்டோம். காகித ஆலை, ரசாயன தொழிற்சாலை உள்ளிட்டவை மார்ச் மற்றும் ஏப்ரல் மாத சம்பளங்களை வழங்கியது. சில நிறுவனங்கள் பாதி சம்பளம் மட்டுமே வழங்கியது.  மே மாதத்திற்கான சம்பளம் பணிக்கு வந்தால் மட்டுமே வழங்கப்படும் என அந்தந்த நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துவிட்டது.

தற்போது பேருந்து மற்றும் ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படவில்லை. இதனால் கன்னியாகுமரி, நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை ஆகிய நகரங்களில் இருந்து சென்னை உள்ளிட்ட நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இ-பாஸ் சேவை அவசர தேவைகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.எனவே, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்பவர்களுக்கு சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவைகளை அரசு ஏற்படுத்திக்கொடுப்பது போன்று மாவட்டங்களில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீண்டும் தங்களின் பணிக்கு திரும்ப உரிய வாகன வசதியை ஏற்படுத்தித்தர வேண்டும். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல சிறப்பு பேருந்து, ரயில் சேவைகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.



Tags : government offices ,home Railway , Rail, Bus Transport, Chennai
× RELATED அரசு அலுவலர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்