×

கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்கான ரெம்டெசிவர் மருந்து செயற்கை தட்டுப்பாடு: தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் விலை ரூ.40 ஆயிரம்; டாக்டர்கள் பகீர் தகவல்

சென்னை: கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கான ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு ஒரு டோஸ் விலை ₹40 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுவதாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 25 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல் அலையை காட்டிலும் இரண்டாவது அலையில் பாதிப்பு அதிகமாக உள்ளது.இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பாதிப்பு அதிகரித்து கொண்டே இருப்பதால் சென்னை உட்பட தமிழகத்தில் பல மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. எந்த மருத்துவமனைக்கு சென்றாலும் இடம் இல்லை. வேறு மருத்துவமனையை பாருங்கள் என்று அலைக் கழிக்கின்றனர். இதனால் நோயாளிகளும், உறவினர்களும் அலைந்து திரிய வேண்டி உள்ளது. சிபாரிசு உள்ளவர்கள் மட்டுமே விரைவாக மருத்துவமனைகளில் சேர முடிகிறது. அதையும் மீறி மருத்துவமனையில் இடம் கிடைத்தாலும் நோயாளிகளின் உயிரை காப்பாற்றும் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் வசதிகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்குப் பல்வேறு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் வழங்கப்பட்டாலும் ஆபத்தான நிலையில் உள்ள கொரோனா நோயாளிகளைக் காப்பாற்றுவதற்கு `ரெம்டெசிவிர்’ ஊசி மருந்தையே மருத்துவர்கள் அதிகளவில் பரிந்துரை செய்கின்றனர். இதன் மூலம் நோயாளிக்கு எளிதாக கொரோனா சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற முடிகிறது. மருத்துவ துறையில் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ரெம்டெசிவர் மருந்துக்கு தமிழகத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவர் மருந்துகளை வெளியில் மருந்து கடைக்கு சென்று வாங்கி வரச் சொல்கின்றனர். ஆனால், ரெம்டெசிவர் மருந்தை வாங்க பல இடங்களில் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ரெம்டெசிவர் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மருந்து பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னையில் கள்ள சந்தை வாயிலாக மருந்துகள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது.அதனால் தான் மருந்து கடைகளுக்கு சென்று உரிய ஆவணங்கள் காட்டினால் கூட ரெம்டெசிவர் இல்லை என்று மருந்து விற்பனையாளர்கள் சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில் அவர்கள் கூடுதல் விலைக்கு வெளியில் கிடைப்பதாகவும், தேவையெனில் அதை வாங்கி தருவதாகவும் அவர்களே கூறுகின்றனர். நோயாளிகளின் உறவினர்களும் அதிகளவில் பணம் கொடுத்து மருந்தை வாங்கிச் செல்கின்றனர். இதை பயன்படுத்தி கொண்டு சில தனியார் மருத்துவமனைகள் ‘ரெம்டெசிவிர்’ மருந்தை கூடுதல் விலைக்கு போட்டு கட்டணம் வசூல் செய்கின்றனர். குறிப்பாக, ஒரு டோஸ் ரூ.40 ஆயிரம் வரை போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து டாக்டர்கள் சிலர் கூறுகையில், ‘‘தற்போது, கொரோனா வைரசின் பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடாது என்பதற்காக நோயாளிகளுக்கு ரெம்டெசிவரை அளிக்கிறோம். ஒரு சிலருக்கு இந்த மருந்து செலுத்துவதால் குணமாகிறது. ஒரு சிலருக்கு இந்த மருந்து மூலம் கொரோனா பாதிப்பு பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதலே அரசு, தனியார் மருத்துவமனைகளில் ேநாயாளிகளுக்கு இந்த மருந்தை பயன்படுத்தி வருகின்றனர். ரெம்டெசிவர்  நுரையீரல் பாதிப்பில் இருந்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றுகிறது. ஒருவருக்கு 6 டோஸ் வரை போட வேண்டும். இந்த மருந்து ரூ.4 ஆயிரம் விலை தான். அரசு மருத்துவமனையில் இலவசமாக போடப்படுகிறது. ஆனால், தனியார் மருத்துவமனையில் ரூ.15 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த மருந்து மிகவும் முக்கியமானவை எனும் நிலையில் தற்போது ரெம்டெசிவர் தட்டுப்பாடு இருக்கிறது. சென்னையில் ஒரு ரெம்டெசிவர் ஒரு டோஸ் ₹30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை போகிறது. வெளியில் வந்து நிறைய பேர் அதிகளவில் விற்பனை செய்வதால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லை.ஒரு மாதத்துக்கு மட்டுமே கையிருப்பில் உள்ளது. அதே நேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் தான் தட்டுப்பாடு உள்ளது. அங்கு தான் கூடுதலாக கட்டணம் வசூலிக்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த நிலையில் ரெம்டெசிவர் மருந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை தடுப்பது மட்டுமின்றி செயற்கை தட்டுபாட்டை ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.வைரஸ்களுக்கு எதிராக சிறப்பான செயல்பாடுமனிதர்களுக்கு பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல், டெங்கு காய்ச்சல், சிக்குன் குனியா போன்றவை வைரஸால் வரக்கூடியது. அனைத்து வகை வைரஸ்களுக்கு எதிராக ரெம்டெசிவர் மருந்து சிறப்பாக செயல்படுகிறது. கொரோனா வைரஸ் கூட இந்த மருந்துக்கு ஓரளவுக்கு  கட்டுப்படுகிறது. இந்த தகவல் முதல் கட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. எனினும், இது, கொரோனாவுக்கான நிரந்தர மருந்து கிடையாது.மாற்று மருந்தில் கொள்ளைகொரோனாவுக்கு ரெம்டெசிவர் தவிர ‘டாக்லீசமப்’ மருந்து இருக்கிறது. மோனோ குளோனால் ஆண்டிபாடி என்று சொல்வார்கள். இந்த மருந்து போட்டால் நல்ல பலன் கிடைப்பதால் பலர் பயன்படுத்துகின்றனர். அதன் விலை ₹40 ஆயிரம் ஆகும். இப்போது,  கள்ளச்சந்தையில் ₹2 லட்சம் வரை ஒரு டோஸ் மருந்து போகிறது. ஒரு  நோயாளிகளுக்கு 6 டோஸ் போட வேண்டுமென்றால் ₹12 லட்சம் வரை போகிறது.உயிர் இழப்பை தடுக்கலாம் கொரோனா நோயாளிகளுக்கு அறிகுறிகள் தொடங்கி முதல் பத்து நாட்களுக்குள் ரெம்டெசிவர் மருந்து கொடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நோயின் ஆரம்பக் கட்டத்தில், கொரோனா தொற்றாளர்களுக்கு  ரெம்டெசிவர் மருந்து வழங்கினால் நல்ல பலன் கிடைப்பதாக தெரிகிறது. அதாவது உயிர் இழப்பு உள்பட சிக்கலான நிலைக்கு நோயாளிகள் செல்ல மாட்டார்கள் என்பதால், ஆன்டிவைரஸ் மருந்தாக ரெம்டெசிவர் பயன்படுத்தலாம்.கள்ள மார்க்கெட்டில் விலை எவ்வளவு?ரெம்டெசிவர் ஊசி 100mg குப்பிகளை ரூ.14 ஆயிரம் வரை விற்பனை  செய்வதாக கூறப்படுகிறது. இந்த மருந்து ரூ.900 முதல் அதிகபட்சமாக ரூ.4,800 வரை விலைக்கு கிடைக்கும். ஆனால், தட்டுப்பாட்டை பயன்படுத்தி கொண்டு,தொடர்ந்து மருந்து விலையை அதிகரித்து கொண்டே செல்வதாகவும் கூறப்படுகிறது. பணக்கார நோயாளிகள் என்றால் ரூ.40 ஆயிரம் வரை கள்ள மார்க்கெட்டில் கறந்துவிடுகின்றனர்….

The post கொரோனா நோயாளிகளை காப்பாற்றுவதற்கான ரெம்டெசிவர் மருந்து செயற்கை தட்டுப்பாடு: தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோஸ் விலை ரூ.40 ஆயிரம்; டாக்டர்கள் பகீர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Dr. ,Bagir ,CHENNAI ,Doctors ,Bagheer ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!