×

ரசிகர்கள் இல்லாமல் ஓடினால் வீரர்களுக்கு உத்வேகம் கிடைக்குமா?

புதுடெல்லி: உற்சாகப்படுத்தும் ரசிகர்கள் இல்லாமல்  ஓட, விளையாட வீரர்கள் விரும்புவதில்லை. ஆனால் கொரானா தொற்று பீதி நிலவும் நிலையில் வேறு வழியும் இல்லை என்று உலக தடகள சங்கங்களின  கூட்டமைப்பு (ஐஏஏஎப்)  தலைவர் செபாஸ்டின் கோ தெரிவித்தார். கொரோனா வைரஸ் தொற்றால் முடங்கி கிடக்கும்  விளையாட்டு உலகம் மெல்ல அதிலிருந்து மீண்டு வருவதற்கான சாத்தியங்களை  செயல்படுத்த ஆரம்பித்துள்ளது. கால்பந்து , பேஸ்பால் போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கிற்குள் நடக்கத் தொடங்கியுள்ளன.அதனால்  குழுவாக இல்லாமல் தனித்தனியாக சாதிக்கும் தடகள போட்டிகளையும் நடத்தினால் என்ன என்ற முடிவுக்கு தடகள சங்கங்கள் வந்துவிட்டன. அதற்கு ஏற்ப இந்தியாவில் தடகள வீரர்கள், சங்கங்கள்  தனிநபர் விலகலுடன் பயிற்சியை மேற்கொள்ள  மத்திய அரசிடம் அனுமதி கேட்டனர்.

‘அவசரப்பட்டு அனுமதி கொடுக்க முடியாது’ என்று சொன்ன மத்திய விளையாட்டு அமைச்சகம், போட்டிகள் நடத்த  வசதியாக நிரந்தர செயல் நடைமுறைகளை வகுத்துள்ளது. அதனை பல்வேறு விளையாட்டு அமைப்புகளுக்கு அனுப்பி கருத்துகளை கேட்கவும் தொடங்கியுள்ளது.அதற்கு விரைவில் இறுதி வடிவம் கிடைத்து அமலுக்கு வரும் என்பதால் செப்.24ம் தேதி  ‘இந்தியன் கிராண்ட் பிரீ’ தடகள போட்டியை பாட்டியாலாவில் ரசிகர்கள் இல்லாமல் நடத்த  இந்திய தடகள கூட்டமைப்பு (ஏஎப்ஐ) முடிவு செய்துள்ளது.அதனால் ஐஏஏஎப் , உலகின்  பல்வேறு நகரங்களில் நடத்தும் ‘டைமண்ட் லீக்’ தடகள போட்டியில் இந்தியா பங்கேற்காது என்று ஏஎப்ஐ அறிவித்துள்ளது.  மே.24ம் தேதி தொடங்குவதாக இருந்த இந்தாண்டுக்கான டைமண்ட் லீக் போட்டி கொரோன பீதி காரணமாக ஆக.14ம்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்தப் போட்டி ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கிற்குள்  நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில்  பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ள இத்தாலி உள்ளிட்ட நாடுகள், தனி மனித இடைவெளியை கடைபிடிக்க உதவும் 400, 800 மீட்டர் ஓட்டங்களில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்துள்ளன. அதற்காக வீரர்கள் பயிற்சி பெற அரசிடம் அனுமதி கோரியுள்ளன. அதேநேரத்தில் தொடர் (ரிலே) ஓட்டங்களில் வீரர்கள் தடிகளை (பேட்டன்) ஒருவருக்கு ஒருவர் கைமாற்றுவதால் கொரோனா தொற்று ஏற்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளன.  எனவே இந்த முறையில் மாற்றங்கள் செய்ய சில நாடுகளின் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில்  ஊடகங்களிடம் பேசிய ஐஏஏஎப்  தலைவர் செபாஸ்டின் கோ கூறியதாவது: ரசிகர்கள் இனி நேரடியாக தடகள போட்டிகளை பார்க்கும்  வாய்ப்பு கிடைக்காது.  அதே நேரத்தில் தடகள ரசிகர்களின் எண்ணிக்கை குறையாமல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஆராயப்படும்.

ஊடகங்கள் வழியாக அவர்கள் போட்டிகளை ரசிக்கலாம். ரசிகர்கள் இல்லாவிட்டாலும் வீரர்களை உற்சாகப்படுத்த  பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளோம்.
உற்சாகப்படுத்தும் ரசிகர்கள் இல்லாமல் ஓட வீரர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் வேறு வழில்லை. மூடிய அரங்கில் மட்டுமல்லாமல், ரசிகர்கள் இல்லாமல் மாற்று இடங்களிலும் போட்டியை நடத்தும் நிலைமை உள்ளது. இருந்தாலும்  வீரர்கள், போட்டி  அமைப்பாளர்கள், ஒளிபரப்பு உரிமை பெற்றவர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டியதும் அவசியம்.

இன்னும் பல நாடுகள் ஊரடங்கை தளர்த்தாமல் இருப்பதால்,  தடகள வீரர், வீராங்கனைகள் இன்னும்  பயிற்சியை தொடங்க வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள்.  கூடவே பாதுகாப்பை  கருத்தில் கொண்டு, அதற்கு ஏற்ப வீரர்களின் நலனுக்கான சிறந்த நடைமுறைகள் பின்பற்றப்படும்.  இந்த இக்கட்டான சூழலில் எங்களுக்கும் நிதி நெருக்கடி உள்ளது. ஆனாலும் தகுதியானவர்களுக்கு நிதி உதவி அளிக்க உள்ளோம். எனவே நிதி தேவைப்படுபவர்கள் மே 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கோ கூறியுள்ளார்.

தனியே தன்னந்தனியே...
கொரோனா பீதி காரணமாக கட்டுப்பாடுகள், தனிநபர் இடைவெளி காரணமாக தடகள வீரர்கள் வெளியில் வருவதே பல நாடுகளில் பிரச்னை. ஆனால் நார்வே நாட்டைச் சேர்ந்த  3000 மீட்டர் ஓட்டப்பந்தய தேசிய சாம்பியன் கரோலினா ஜெர்கெலி ( 29), ஒஸ்லோ நகரில் உள்ள பிஸ்லெட் அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் ஜூன் 11ம் தேதி  தனியாக ஓடி பழைய சாதனையை (8 நிமிடம், 31.8 விநாடி) முறியடிக்க திட்டமிட்டுள்ளார்.



Tags : fans , Fans, players, inspiration
× RELATED தென்கொரியாவைக் கலக்கும் 80வயது...