×

சேலத்தில் பரபரப்பு சம்பவம் போதை ஊசி போட்ட 17 வயது சிறுவன் சாவு: நண்பர்களை பிடித்து போலீஸ் விசாரணை

சேலம்: சேலத்தில் போதை ஊசி போட்டுக் கொண்ட 17 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.  சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் அஜித்குமார் (17). படிக்காமல் ஊர் சுற்றி வந்துள்ளான். நேற்று முன்தினம் மதியம் நண்பர்கள் 3 பேருடன் அந்த பகுதியில் உள்ள கரட்டிற்கு சென்றுள்ளான். பிறகு 2.30 மணியளவில் வீட்டிற்கு போதையில் திரும்பிய அஜித்குமார், தனக்கு மயக்கம் வருவதாக பெற்றோரிடம் கூறியுள்ளான். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆம்புலன்ஸ் விரைந்து வந்தநிலையில், அஜித்குமார் பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் சென்று, சிறுவன் அஜித்குமார் சடலத்தை கைப்பற்றி, பிரேதப்பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சிறுவன் சாவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. அஜித்குமார்,  மற்றும் அவனது நண்பர்கள் 3 பேரும் போதை ஊசி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர். சம்பவத்தன்று நண்பர்களுடன் சேர்ந்து கரட்டில் வைத்து, போதை ஊசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும், சில மாத்திரைகளையும் உட்கொண்டுள்ளனர்.

சிறிது நேரத்தில் அஜித்குமார் மயக்கமடைந்ததால், அவனது நண்பர்கள் வீட்டிற்கு கொண்டு வந்து விட்டுள்ளனர் எனத்தெரியவந்தது. இதனால், இறந்த அஜித்குமாரின் நண்பர்கள் 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும், இவர்களுக்கு போதை மாத்திரை, ஊசி வழங்கியது யார்?, அதில் என்ன மருந்து பயன்படுத்தப்பட்டது? என்பது பற்றியும் போலீசார் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Salem , Salem, drug paraphernalia, police investigation
× RELATED தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலி