×

கொரோனா ஊரடங்கில் இருந்து நாட்டை மீட்க₹20 லட்சம் கோடி என்று அறிவித்தவை எல்லாம் பொருளாதார சலுகையா.. பட்ஜெட் மறுபதிப்பா? சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை தான் கொரோனா நிவாரண ெதாகுப்பு என்ற பெயரில் புதிய சலுகை போல மத்திய அரசு அறிவித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி தகவலை ெவளியிட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி முதல் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சலுகைகளை அறிவித்து வருகிறார். நேற்று முன்தினம் மூன்றாவது கட்டமாக 11 அறிவிப்புகள் வெளியாகின. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம், விலங்குகளுக்கு தடுப்பூசி, தேனி வளர்ப்பு, மூலிகை வளர்ப்பு, தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கு மட்டுமின்றி காய்கறிகளுக்கும் பசுமை திட்டத்தை நீட்டிப்பது, மீனவர்கள் நலனுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை இதில் அடங்கும்.

இந்த 11 அறிவிப்புகளில் பல திட்டங்கள் மோடி அரசின் பட்ஜெட்களில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளன என்பது தெரியவந்துள்ளது. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019 ஜூலை 5 ம் தேதி தனது முதலாவது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு நியாயமான விலை பெறுவதற்கு ஏபிஎம் சி சட்டம் தடையாக அமையாது என தெரிவித்திருந்தார்.இது நிர்மலாவின் பட்ஜெட் உரையில் மட்டுமல்ல, அதற்கு முன்பு மறைந்த அருண்ஜெட்லி நிதியமைச்சராக இருந்தபோது வெளியிட்ட அறிவிப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஒரு தேசிய சந்தை அமைப்பதை விரைவுபடுத்துவதற்காக, மாநில அரசுகளுடன் மத்திய அரசு இணைந்து செயல்படும் எனவும், நகர்ப்பகுதிகளில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக விற்பதற்கான சந்தையை உருவாக்குவதற்கு ஊக்குவிக்கப்படும் என்றார்.

2016 - 17ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஜெட்லி இதனை வலியுறுத்தினார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 15ம் தேதி நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வேளாண் பொருளாதாரத்தின் சீரமைப்பு செய்ய வேண்டுமெனவும், ஏ பி எம் சி சட்டத்தை இதை மறு ஆய்வு செய்ய வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திலும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட  2019 - 20 பொருளாதார ஆய்வறிக்கையில், அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் இன்றைய காலகட்டத்திற்கு பொருத்தமாக உள்ளதா என்பதை நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆராய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தது.

வெங்காயம், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவை தற்போது பசுமை திட்டத்தில் உள்ளது. இவற்றை சந்தைக்கு கொண்டு செல்ல போக்குவரத்து மானியம் வழங்கப்படுகிறது.  இந்தத் திட்டம் அனைத்து காய்கறி பழங்களுக்கும் நீட்டிக்கப்படும் என, 2018 - 19 பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இதற்கு  500 கோடி ஒதுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதையேதான் நிர்மலா சீதாராமன் தற்போதைய சலுகை திட்டத்தில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் மீன்வளத் திட்டத்தில், மீனவர்கள் பலன் பெறும் வகையில் உள்கட்டமைப்பு மேம்பாடு செய்யப்படுவது தொடர்பாக தான் முதலாவதாக தாக்கல்செய்த 2019 - 20 பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இவ்வாறு ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களையே கொரோனா ஊரடங்கு காலத்துக்கான சலுகை அறிவிப்பாக மத்திய அரசு வெளியிட்டது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  இது பட்ஜெட்டின் தொடர்ச்சியாக எனவும், அப்படி என்றால் அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா? புதிய சலுகை போல அறிவித்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : activists ,country , Corona, curfew, economic concession, social activists
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!