×

கொரோனா பரவல் அச்சத்தால் ‘சென்டிரலைஸ்டு ஏசி’ நிறுத்தம் கண்ணாடி சுவர்களுக்குள் மூச்சுமுட்டுதய்யா.. தவிக்கும் தலைமைச் செயலக பணியாளர்கள்

* பொதுத்துறைக்கும், பொதுப்பணித்துறைக்கும் ‘லடாய்’

சென்னை: கொரோனா பரவல் அச்சத்தால் தலைமை செயலகத்தின் ‘சென்டிரலைஸ்டு ஏசி’ நிறுத்தப்பட்டது. கண்ணாடி சுவர்களால் ஆன ஜன்னல்களை திறக்க முடியாததால் பணியாளர்கள் மூச்சுமுட்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் இடப்பற்றாக்குறை காரணமாக  சென்னை அண்ணா சாலை, வாலாஜா  சாலை, சிவானந்தா சாலை சந்திப்பில் புதிய தலைமைச் செயலகம் ஓமந்தூரார்  தோட்டத்தில் கட்டப்பட்டது. சட்டமன்றமும் முதலமைச்சர், துணை முதலமைச்சர்  இருவரின் கீழ் உள்ள துறைகளும் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றப்பட்டது.  படிப்படியாக அனைத்து துறைகளும் இடம் மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், 2011ல்  ஆட்சிக்கு வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, மீண்டும் தலைமைச்  செயலகத்தை நாமக்கல் கவிஞர் மாளிகையில் (புனித ஜார்ஜ்  கோட்டை) செயல்படும் உத்தரவை பிறப்பித்தார்.

அதற்கு  நவீன மயம் என்ற பெயரில் 40 ஆண்டுகால பழைய பலவீனமான நாமக்கல் கவிஞர்  மாளிகையை உள்ளே சுத்தப்படுத்தாமல் அப்படியே கவசம்  போட்டது  போல முன்னும் பின்னும் பிரமாண்டமான கிரேக்க கட்டிடக்கலை தூண்கள் கட்டப்பட்டன. அதோடு, கூண்டில் அடைத்தது போல சென்டிரலைஸ்டு ஏசியும் அமைக்கப்பட்டது. இந்த ஏசி அமைப்பதற்காக 10 மாடி கட்டிடம் முழுவதும் ஜெர்மன் நாட்டு கண்ணாடி சுவர்கள் முன்னும் பின்னும் நிரந்தரமாக  பொருத்தப்பட்டுள்ளன. இதில் திறந்து மூடக்கூடிய கண்ணாடிகள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளன.

இந்த கட்டிடத்தின் பத்து தளங்களில் ஏறக்குறைய 35 அரசுத் துறைகளின் ஐஏஎஸ் அதிகாரிகள், இரண்டாம் நிலை அதிகாரிகள், ஆயிரக்கணக்கான தலைமைச் செயலக ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா வைரஸ்  தொற்றால் சென்டிரலைஸ்டு ஏசி கட்டிடங்களில் ஏசியை இயங்கவிட்டு பணியாளர்கள் பணியாற்றக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் ஏசி பயன்பாடு குறைந்துவிட்டது. இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரம் முதல் நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் ஏசி போடப்படுவது கிடையாது.

இந்த கட்டிடத்தின் பத்தாவது தளத்தில் உள்ள மாநாட்டு அறையில்தான் முதல்வரின் தலைமையில் நடக்கும் முக்கியமான அனைத்து கலெக்டர் வீடியோ கான்பிரன்ஸ், கொரோனா ஆலோசனை உயர்மட்டக் கூட்டங்கள் நடந்து வருகின்றன. 10 மாடிகளிலும் உள்ள துறைகளில் மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் (சுமார் 600 பணியாளர்கள்) தினம் சுழற்சி அடிப்படையில் பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் பணிக்கு வந்து செல்கின்றனர். தொற்று காரணமாக ஏசி  போடாததால், அலுவலகத்தில் உள்ள காற்று வெளியே  போகவும் வசதி இல்லை. இதனால் பணியாளர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.

கட்டிடத்தின் ஜன்னல்களை திறந்து மூடும்படியான வசதியை அமைத்து கொடுக்குமாறு பொதுத்துறை (தலைமை செயலக உள் நிர்வாகம்) கட்டிட பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் ெபாதுப்பணித்துறைக்கு குறிப்பு அனுப்பியது. பொதுத் துறையின் செயலாளர்,  கோப்பினை  பொதுப்பணித்துறை செயலாளருக்கு அனுப்பிவைத்தார். அவர், திறந்து மூடும் கண்ணாடி வைத்தால் மழைக்காலங்களில்  கோப்புகள் நனைந்துவிடும் என்று இந்த திட்டத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்பிரச்னை ெதாடர்பாக இரு துறைகளுக்கு இடையே எந்த ஒரு முடிவும் எடுக்காமல் மூன்று மாதம் ஓடிவிட்டது. குறைந்த பணியாளர்கள் இருப்பதால் பிரச்னை வெளியில் தெரியவில்லை. சென்டிரலைஸ்டு ஏசியை ஓட விடாமலும், காற்றோட்டத்திற்கு கண்ணாடி சுவர்களை திறக்க முடியாமலும் தலைமைச் செயலக கட்டிடம் ஒரு பிரமாண்ட வெற்றிட கட்டிடமாக நிற்கிறது.



Tags : Coronal ,AC ,glass walls , Corona, Centralized AC, Curfew, Public Works Department
× RELATED வேலூரில் போட்டியிடும் ஏ.சி.சண்முகத்தை...