×

ஒருநாள் கோபத்தால் 40 நாள் நடந்த பெண்

ஹசாரிபாக்: குடும்ப தகராறில் தவறான ரயிலில் ஏறிச்சென்ற பெண், 40 நாட்கள் நடை பயணத்துக்கு பின் கடந்த 14ம் தேதி குடும்பத்தினரோடு சேர்ந்தார்.  பீகார் மாநிலம், பாகல்பூரை சேர்ந்தவர் சபோ (35). கடந்த மார்ச் 22ம் தேதி இவரக்கும் மாமனாருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறினார் சபோ. பாங்காவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக அவர் ரயில் ஏறியுள்ளார்.  ஆனால், தவறான ரயிலில் ஏறியதால் உத்தரப் பிரதேசம் வந்துவிட்டார். அங்கு இருந்தவர்களிடம் விசாரித்ததில் அவர் கான்பூர் வந்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் வீடு திரும்புவதற்கு விரும்பினார். ஆனால், அவரிடம் பணம் எதுவும் இல்லாததால் செய்வறியாமல்  அவதிப்பட்டார். மார்ச் 24ம் தேதி தொடங்கி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இதனால், சாலை வழியாக பீகாருக்கு நடந்தே செல்ல முடிவு செய்து, தனது பயணத்தை தொடங்கினார். ஜார்கண்ட், பீகார் எல்லை சோதனை சாவடி அருகே ஹசாரிபாக் மாவட்டத்தை கடந்த 4ம் தேதி வந்தடைந்தார். இந்நிலையில், தொடர்ந்து நடந்து வந்ததன் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது.  மயங்கி விழுந்த அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு மகேஸ்வராவில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்ந்தனர். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும்  கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது.  இதனை தொடர்ந்து அவர் குறித்த விவரங்களை கேட்டறிந்த அதிகாரிகள், பீகார் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விவரங்களை தெரிவித்தனர். பின்னர் பாகல்பூரில் இருந்து மாண்டூர் மிர்சாசோக் வந்த அதிகாரிகள் சபோவை காரில் வீட்டிற்கு அழைத்து சென்று, கடந்த 14ம் தேதி கணவரிடம் ஒப்படைத்தனர்.



Tags : Fury One Day ,40th Day , One day anger, woman, corona, curfew
× RELATED மெய்யூர் கொசஸ்தலை ஆற்றுப்பாலம் சேதம்;...