கடன் கொடுப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணம் கொடுங்க...பிரதமருக்கு ராகுல் காந்தி கோரிக்கை

புதுடெல்லி: கொரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரத்தை மீட்க விவசாயிகள், நடுத்தர மக்கள், தொழில் துறையினர் உட்பட அனைவருக்கும் ₹20 லட்சம் கோடிக்கான நிதிச் சலுகை வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், மத்திய நிதி அமைச்சகம் அறிவித்த இந்த நிதி சலுகை அனைத்தும் கடனாகவும், தொழில்துறைக்கு முதலீடுகளை ஈர்ப்பதாகவும் மட்டுமே உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நேரடியாக நிதி உதவி செய்ய வேண்டுமென காங்கிரசும், பல பொருளாதார நிபுணர்களும் வலியுறுத்தியும், அதுபோன்ற எந்த அறிவிப்பும் இல்லை.

இந்நிலையில், நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி கூறியதாவது: மத்திய அரசு, மக்களுக்கு கடன் தருபவரைப் போல் நடந்து கொள்வதை முதலில் நிறுத்த வேண்டும். தற்போதைய சூழலில் ஏழைகளும், பாதிக்கப்பட்ட மக்களும் எதிர்பார்ப்பது கடனை அல்ல, பணத்தைதான். எனவே, பிரதமர் மோடி தயவு செய்து கோவிட்-19 சிறப்பு நிதி சலுகையை மாற்றி அமைக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.  ஏழை மக்களுக்கும், விவசாயிகளுக்கும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்துவது குறித்து பிரதமர் மோடி பரிசீலிக்க வேண்டும்.

பொருளாதாரத்தை நோக்கி பெரிய புயல் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது. அது இன்னும் தாக்கவில்லை. அது தாக்கும் போது சேதம் பெரிய அளவிலும், பலரும் பாதிக்கப்படுவார்கள். எனவே, மக்களுக்கு நேரடியாக பணத்தை தந்து, தேவையை உருவாக்க வேண்டும். அப்படி செய்யத் தவறினால், மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டியிருக்கும். அது கொரோனாவை விட கொடூரமாக இருக்கும். மேலும், வயதான மற்றும் பாதிக்கப்படக் கூடிய மக்களின் உயிரை தியாகம் செய்யாமல், புத்திசாலித் தனமாக ஊரடங்கை தளர்த்துவது மிகவும் முக்கியம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories:

More
>