×

தந்தையை பார்க்காமல் சாப்பிட மறுப்பு: குழந்தையை தூக்கிக்கொண்டு ஈரோட்டுக்கு நடந்தார் தாய்: மேலூரில் இருந்து 70 கிமீ தூரத்தில் மீட்பு

மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழசேவல்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார்.  மனைவி முத்துலட்சுமி. மகள் நித்யா(5). மாற்றுத்திறனாளியான சிவக்குமார், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். மாதம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 மாதங்களாக அவர் ஊருக்கு வரவில்லை. இதனால் மகள் நித்யா, தந்தையை பார்க்க வேண்டும் என தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தாள். 3 நாட்களுக்கும் மேலாக சாப்பிடவும் மறுத்துள்ளார். வாகன வசதிகள் இல்லாததால் முத்துலட்சுமி குழந்தையை தூக்கிக்கொண்டு, கீழசேவல்பட்டியில் இருந்து நடந்தே ஈரோட்டுக்கு புறப்பட்டார்.

சுமார் 70 கிமீ தூரத்தைக் கடந்து, வாடிப்பட்டி அருகே நேற்று முன்தினம் குழந்தையுடன் முத்துலட்சுமி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். இதனைக் கண்ட வாடிப்பட்டி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி சந்தேகப்பட்டு விசாரித்துள்ளார். அப்போது கணவரை பார்க்க ஈரோட்டிற்கு நடந்து செல்வதாக கூறினார். அதிர்ச்சியடைந்த அவர், கலெக்டர் வினயிடம் இதுகுறித்து, தகவல் தெரிவித்தார். கலெக்டர் உத்தரவின்படி முத்துலட்சுமி மற்றும் குழந்தையை மதுரை செஞ்சிலுவை சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர்.

தாயும், மகளையும் மதுரை ஊமச்சிகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் உள்ள முகாமில் இரவு தங்க வைத்து, மருத்துவர்களை கொண்டு கொரோனா பரிசோதனை செய்தனர். மேலும் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி, அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டு விட்டு வந்தனர். மேலும் ஈரோட்டில் இருந்து சிவக்குமாரை அழைத்து வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



Tags : baby ,Melur , Father, child, erode, mother, corona, curfew
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி