×

நீதிபதியிடம் சிக்கிய ரேஷன்கடைக்காரர்: வார்த்தையில இல்லே...ஆனா கடையில இருக்கு...

திருவனந்தபுரம்:  திருவனந்தபுரம் கரிக்ககம் பகுதியை சேர்ந்தவர்  பஞ்சாபகேசன்.  இவர் காசர்கோடு மாவட்ட நீதிபதியாக உள்ளார்.  பொது முடக்கத்தை தொடர்ந்து கேரளாவில்  அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும்  தலா 15 கிலோ அரிசி மற்றும் ₹1,100 மதிப்புள்ள  மளிகைப்பொருட்கள் இலவசமாக  வழங்கப்பட்டு வருகின்றன. முதலில் வறுமைக்ேகாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இவை வழங்கப்பட்டன. நேற்று  முன்தினம் முதல் வறுமைக்கேட்டுக்கு மேலுள்ள  வெள்ளைநிற கார்டுதாரர்களுக்கும் இலவச பொருட்களின்  விநியோகம் தொடங்கியது.  

இந்த நிலையில் நீதிபதி  பஞ்சாபகேசன் நேற்று முன்தினம் தனது  மனைவியுடன் வீட்டுக்கு அருகில் உள்ள  ரேஷன்கடைக்கு சென்றார். அப்போது ‘இலவச பொருட்கள்  இருப்பு இல்லை’ என  ரேஷன்கடைக்காரர் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.  இதனால் நீதிபதி  ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். இருப்பினும் சந்தேகம் அடைந்த  நீதிபதி நுகர்பொருள் வாணிபத்துறையின் இணையதளம் சென்று, ரேஷன்கடையின் உரிமம்  எண்ணை  வைத்து பரிசோதித்து பார்த்தார். அப்போது சம்பந்தப்பட்ட அந்த  கடையில், இலவச பொருட்கள் 234 பைகள் இருப்பு உள்ளது தெரியவந்தது.

ரேஷன் கடைக்காரர் மோசடியில் ஈடுபடவே தனக்கு பொருட்கள்  வழங்கவில்லை என  நீதிபதி சந்தேகம் கொண்டார். இதையடுத்து அவர் நுகர்பொருள் வாணிபத்துறை  செயலாளர் மற்றும் இயக்குநருக்கு போன் செய்து புகார் தெரிவித்தார்.  இதையடுத்து  திருவனந்தபுரம் தாலுகா வட்ட வழங்கல் அதிகாரி உடனடியாக ரேஷன்கடைக்கு   விரைந்து சென்று விசாரித்தார். அப்போது அங்கு ஏராளமான பொருட்கள் இருப்பு இருந்தது. இதையடுத்து அதிகாரி அந்த கடையின் உரிமத்தை உடனடியாக  ரத்து செய்தார். இதனால் அதிர்ந்துபோன ரேஷன்கடைக்காரர் சுகுமாரன்,  நீதிபதியின் வீட்டுக்கு ஓடோடி சென்று இலவச பொருட்களை வழங்கி அவரிடம்  மன்னிப்பு கோரி திரும்பினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : judge ,shop , Justice, ration shopkeeper, Trivandrum
× RELATED கோவையில் நீதிபதிக்கு கொரோனா 3 நீதிமன்றங்கள் மூடல்