×

திருப்பதி ஏழுமலையானுக்கு ஊரடங்கிலும் ஒரே நாளில் 2 லட்சம் உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதியில் பக்தர்கள் வருகை இல்லாத ஊரடங்கு நேரத்திலும் பணக்காரர் கடவுளான ஏழுமலையானுக்கு ஒரே நாளில் 2 லட்சம் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது. உலக பிரசித்திப் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்து தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கை செலுத்தி வருவது வழக்கம். ஆனால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக கொரோனா பரவலை  தடுப்பதற்காக கோயிலில் பக்தர்கள்  அனுமதிக்கப்படாமல் உள்ளனர்.
இருப்பினும் சுவாமிக்கு நடைபெறக்கூடிய நித்திய பூஜைகளான சுப்ரபாதம் முதல் ஏகாந்த சேவை வரை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு சுப்ரபாத சேவை தொடங்கியவுடன் உண்டியல் வைக்கப்பட்டு ஏகாந்த சேவைக்கு பிறகு மீண்டும் உண்டியலை எடுத்து பரக்காமணிக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படாவிட்டாலும், திருமலையில் பணிபுரியக்கூடிய அர்ச்சகர்கள், தேவஸ்தான பணியாளர்கள், போலீசார், விஜிலன்ஸ் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  தங்கள் பணியை செய்து வருகின்றனர். அவ்வாறு பணியில் ஈடுபடும் அர்ச்சகர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இது தவிர அவ்வப்போது அறங்காவலர் குழு உறுப்பினர்களும் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இதன் காரணமாக பக்தர்கள் இல்லாவிட்டாலும் தினந்தோறும் உண்டியலில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை காணிக்கையாக  ஏழுமலையானுக்கு வந்தபடி உள்ளது. இதில் ஒரு நாள் மட்டும் ₹2 லட்சம்  காணிக்கையாக ஏழுமலையானுக்கு  வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : Tirupati Ezumalaimana , Tirupati Ezumalayan, Curfew, Corona
× RELATED திருப்பதி ஏழுமலையானுக்கு ₹25 லட்சம்...