×

மனநலம் பாதித்து திரிந்தவரை கொரோனா ஒன்று சேர்த்தது: கணவர், மகள், மகன் கட்டி தழுவி கண்ணீர்

தஞ்சை: மனநலம் பாதித்து 2 ஆண்டாக சுற்றி திரிந்தவரை ஊரடங்கின்போது தஞ்சையில் மீட்டு அரவணைத்ததில் குணமடைந்த திருவாரூர் பெண்ணை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவரை கணவர், மகள், மகன் கட்டி தழுவி கண்ணீர் விட்டனர். கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தஞ்சையில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கபட்டோர், ஆதரவற்றோர் என 120 பேரை பிடித்து வந்து மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர்.

இதில் மனநலம் பாதித்த திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த சித்ரா (32) என்பவர் கடந்த 3 நாட்களுக்கு முன், நான் எனது குழந்தைகளை பார்க்க வீட்டுக்கு போக வேண்டும் என்று பேசி வந்தார். இதையடுத்து தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள், சித்ரா கூறிய இடத்துக்கு சென்று விசாரித்தபோது உண்மையென தெரியவந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் சித்ராவை அவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது சித்ராவின் கணவர் ஜெயக்குமார் (45), மகன் கவின் (16), மகள் ரித்திகா (11) ஆகியோர் 2 ஆண்டுகள் கழித்து சித்ராவை பார்த்த மகிழ்ச்சியில் கண்ணீருடன் ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி கொண்டனர்.

இதுகுறித்து, தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வீரமணி கூறுகையில், சில ஆண்டுகளாக மனநலம் பாதித்த சித்ரா சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சரியாகாததால் 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு புறப்பட்டு விட்டார். தஞ்சையில் சுற்றி கொண்டிருந்தவரை பிடித்து சிறப்பு முகாமில் தங்க வைத்தோம். ஒரு மாதம் மருந்து, மாத்திரை இல்லாமல் அன்பும், அரவணைப்பு ஒன்றையே கொண்டு அவர் மனதை மாற்ற முயற்சி செய்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது என்றார். மனநலம் பாதித்த பெண்ணை கொரோனா குடும்பத்துடன் சேர்த்து வைத்தது, கெட்டதிலும் ஒரு நல்லது நடந்துள்ளதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags : Corona , Mental, corona, husband, daughter, son
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...