×

ஆபத்துக் காலத்தில் திமுக எப்படிச் செயல்படும் என்பதை நிரூபித்துள்ளோம்; கொரோனா காலக் களப்பணிகள் தொய்வின்றி தொடரும்: மு.க ஸ்டாலின் அறிக்கை

சென்னை: கொரோனா காலக் களப்பணிகள் தொய்வின்றி தொடரும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்று குறித்து கவலைப்படாமல் மக்கள் பணியாற்றிய திமுக நிர்வாகிகளுடன் நடத்திய காணொலி ஆலோசனைக் கூட்டம் குறித்து அறிக்கை விடுத்துள்ளார். பேராபத்துக் காலத்தில் தி.மு.க. எப்படிச் செயல்படும் என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்டி இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியதாவது; ஊரடங்கை அறிவித்த அரசாங்கம், அப்பாவி மக்களின் வாழ்க்கையைப் பற்றியோ, வாழ்வாதாரத்தைப் பற்றியோ எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

உழலும் தமிழ் மக்களைப் பற்றி உளப்பூர்வமாகக் கவலைப்பட்ட ஒரே இயக்கம் தி.மு.கழகம். மக்கள் அவசியம் தேவையென எதிர்பார்க்கும் அனைத்தையும், குமரி முதல் சென்னை வரை அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்பட்டுள்ளன. சாதி - மதம் பார்க்காமல், வேண்டியவர் - வேண்டாதவர் என்ற பாகுபாடு இல்லாமல், அவர் அந்தக் கட்சி - இவர் இந்தக் கட்சி என்று பேதப் படுத்தாமல், இந்தச் சீரிய தொண்டு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சொன்னால், இந்தத் திட்டம் முறையாகச் செயல்படுகிறதா என்று நோட்டம் விடுவதற்காக ‘போன் செய்தவர்கள் வீட்டுக்கும் பொருட்கள் முறையாக, ஒழுங்காகப் போய்ச் சேர்ந்துள்ளது.

அதைக் கண்டு அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினார்கள். இதுதான் தி.மு.க.,வுக்குப் பெருமை சேர்ப்பது; இந்த இயக்கத்தின் தலைமைத் தொண்டனான எனக்கு மன மகிழ்ச்சியையும் பெருமையையும் தருவது ஆகும். மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குத் திட்டமிட்ட முயற்சி எதுவும் எடுக்காத தமிழக அரசு டாஸ்மாக் கடைத் திறப்புக்கு மட்டும் திருவிழா ஏற்பாடுகளைப் போல எண்ணி, துரிதமாகச் செயல்படுவதைப் போன்ற பொறுப்பற்ற தன்மை வேறு இருக்க முடியாது! ஒரு அரசாங்கமும், பல ஆயிரம் தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து செய்ய வேண்டிய அளவிலான பெரிய செயலை, தி.மு.க என்ற அரசியல் அமைப்பு செய்து காட்டியுள்ளது.

Tags : DMK , Danger, DMK, Corona, MK Stalin
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு