×

ஆம்பன் புயலால் அடுத்த ஒரு வாரத்திற்கு வட தமிழகத்தில் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் அதிகரிக்கும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : வங்கக்கடலில் உருவாகும் ஆம்பன் புயலால் அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் தெற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு தாய்லாந்து வழங்கியுள்ள ஆம்பன் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த புயலால் அடுத்த 5 நாட்களுக்கு வங்கக்கடலின் மத்திய, தெற்கு பகுதியில் மணிக்கு 85கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும். ஒரு வாரம் கழித்து மேற்கு வங்கம் - வங்கதேசம் இடையே புயல் கரையை கடக்கும்.

ஆனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான தென்காசி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வட மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்ஷியஸ் வெயில் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி உள்ளிட்ட இடங்களில் 5 சென்டி மீட்டர் மழையும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை வாடிப்பட்டி, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி உள்ளிட்ட இடங்களில் 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.


Tags : North Tamil Nadu ,accident , Amban, Storm, Meteorological Center, Southwest, Bengal Sea
× RELATED தென் தமிழகம், வட தமிழக மேற்கு...