×

பட்டினியிலும், விபத்திலும் உயிரிழக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது : ஐகோர்ட் நீதிபதிகள் வேதனை

சென்னை : வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சொந்த ஊரை நோக்கி செல்லும் தொழிலாளர்கள் பட்டினியில், விபத்திலும் உயிரிழப்பது வேதனையளிக்கிறது என்று வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், வெளிமாநிலத் தொழிலாளர்கள் நிலை குறித்து மே 22-ம் தேதிக்குள் விரிவான அறிக்கை அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்
மஹாராஷ்டிராவில் சிக்கியுள்ள தமிழர்கள் நாடு திரும்பி முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகாராஷ்டிராவில் சிக்கியுள்ள 400 தமிழர்களை மீட்கக் கோரி வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை

அப்போது, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க மாநில அரசுகள் தவறி விட்டது, வெளிமாநில தொழிலாளர்களின் நிலையை ஊடகங்களில் பார்த்தால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாது என நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சொந்த ஊரை நோக்கி செல்லும் தொழிலாளர்கள் பட்டினியில், விபத்திலும் உயிரிழப்பது வேதனையளிக்கிறது என கூறியுள்ள நீதிபதிகள்,ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை தொழிலாளர்கள் பிற மாநிலங்களில் சிக்கியுள்ளனர்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவு

மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளும் என்ன உதவிகள் வழங்கியுள்ளன? இதுவரை எத்தனை தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர்? என்பது குறித்து விரிவான அறிக்கையை மே 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மத்திய - மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுபோல வெளிமாநிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நலனுக்காக மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தமிழக தலைமை செயலாளரையும் எதிர்மனுதாரராக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Tags : accidents ,judges ,accident , Hunger, accident, death, outstation workers, status, tears, control, can not, icord, judges, torment
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...