×

கொரோனா ஊரடங்கு காரணமாக இட்லி சந்தை மூடல்; வியாபாரம் முடங்கியது: கடைக்காரர்கள் தவிப்பு

ஈரோடு:  கொரோனா ஊரடங்கால் ஈரோடு இட்லி சந்தை மூடப்பட்டுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள கடைக்காரர்கள் பரிதவிக்கின்றனர். ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனியில் இட்லி விற்பனைக்காக பல ஆண்டுகளாக இட்லி சந்தை செயல்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குடும்பத்தினர் இட்லி கடை துவக்கினர். இங்கு தயார் செய்யப்படும் இட்லி, அரசு மருத்துவமனை பகுதியில் விற்பனை செய்யப்படுகிறது. இக்கடை இட்லியின் சுவையறிந்த கடைக்காரர்கள், இவர்கள் தயார் செய்யும் இட்லியை தேடி வர துவங்கினர். இவர்களை பார்த்து 10க்கும் மேற்பட்டோர் கடை போட்டு இட்லி வியாபாரம் செய்து வருகின்றனர். நாளடைவில் இங்கு இட்லி சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் கருங்கல்பாளையம் பகுதி இட்லி சந்தையாக மாறியது. இங்கு ஆர்டர் கொடுப்பவர்களுக்கு ரவா இட்லி, நெய் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, பெங்களூர் இட்லி என பல்வேறு வகையான இட்லி தயார் செய்து வழங்கப்படுகிறது.

தினமும் அதிகாலை 2 மணிக்கு இட்லி தயாரிக்கும் பணி துவங்கி, அதிகாலை 5 மணியில் இருந்து வியாபாரம் சூடுபிடிக்கிறது. காலை, மாலை என இரு வேளையும் இட்லி கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்பத்தில் வெறும் இட்லி ஒன்று 50 பைசாவிற்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு இட்லி ரூ.3.50க்கும், சட்னி, சாம்பார் ஆகியவற்றுடன் சேர்த்து ரூ.6.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு கடையிலும் தினமும் 500 முதல் 1,500 இட்லி வரை தயார் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், கொரோனா ஊரடங்கால் கடந்த 50 நாட்களாக இட்லி சந்தை மூடப்பட்டு கிடக்கிறத. இதனால், இங்குள்ள கடைக்காரர்கள் வருமானம் இன்றி தவிக்கின்றனர். திருமண நிகழ்ச்சி, கட்சி நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளுக்கு இங்கிருந்துதான் இட்லி சப்ளை செய்யப்படுகிறது. ஊரடங்கால் எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறாத காரணத்தால், இட்லி சந்தை மொத்தமாக முடங்கி கிடக்கிறது. இத்தொழிலாளர் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இட்லி விற்பனை செய்து வரும் பங்கஜவள்ளி கூறியதாவது: நாங்கள் தயார் செய்யும் இட்லியை வாங்குவதற்காக வெளியூர்களில் இருந்து ஆட்கள் வருவார்கள். கரூர், சேலம், நாமக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து, பார்சல் வாங்கிச் செல்வார்கள். வெளிமாநிலங்களில் இருந்து ஆர்டர் வந்தால் நாங்களே நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட இடத்திலேயே இட்லி தயார் செய்து வழங்கி வருகிறோம்.

தினமும் ஆயிரக்கணக்கான இட்லி தயார் செய்து வழங்கி வந்தோம். தற்போது, கொரோனா ஊரடஙகால் 100 இட்லிகூட விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. அதிகாலையிலேயே இட்லி, சட்னி தயாரித்து சுடச்சுட வழங்கி வருகிறோம். ஆனால், கடந்த 50 நாட்களாக வியாபாரம் முடங்கி கிடக்கிறது. தற்போது, கடையை குறிப்பிட்ட நேரத்தில் நடத்த அனுமதித்துள்ள நிலையிலும் காலை, இரவு வேளைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதாலும், நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாத காரணத்தாலும் இட்லி விற்பனையாவதில்லை. ஊரடங்கு தளர்வு எப்போது தீரும், இட்லி வியாபாரம் மீண்டும் எப்போது சூடு பிடிக்கும் என தெரியவில்லை. ஒரே கவலையாக உள்ளது.  இவ்வாறு பங்கஜவள்ளி கூறினார்.
பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதாலும், நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாத காரணத்தாலும் இட்லி விற்பனையாவதில்லை. ஊரடங்கு தளர்வு எப்போது தீரும், இட்லி வியாபாரம் மீண்டும் எப்போது சூடு பிடிக்கும் என ஒரே கவலையாக உள்ளது

மிரட்டும் போலீஸ்
ஊரடங்கில் சில தளர்வுகள் காரணமாக, ஓட்டல்கள், உணவு நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இட்லி சந்தையை போலீசார் மூடச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். ஏற்கனவே, 50 நாட்களாக கடை மூடியிருந்த நிலையில் தற்போது கடையை திறந்தும், போலீஸ் கொடுபிடியால் கடை நடத்த முடியாத நிலை உள்ளது என இங்குள்ள கடைக்காரர்கள் புலம்புகின்றனர்.

Tags : shoppers ,Business , Idli Market Closure , Corona Curfew, Business, stalled,shoppers miss
× RELATED ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால்...