×

திருவண்ணாமலை மாவட்டத்தில் விற்பனைக்கு வாய்ப்பின்றி மலர்ந்தும் மணம் வீசாமல் வாடும் மலர்கள்

* நூற்றுக்கணக்கான ஏக்கரில் கருகும் பரிதாபம்
* தமிழக அரசு நிவாரணம் வழங்குமா?

திருவண்ணாமலை:  திருவண்ணாமலை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட மலர்கள் விற்பனைக்கு வாய்ப்பின்றி நிலத்திலேயே கருகி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், புதுப்பாளையம், துரிஞ்சாபுரம், போளூர், கலசபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மலர் சாகுபடி செய்யப்படுகிறது. மல்லி, முல்லை, சம்பங்கி, சாமந்தி, கோழிக்கொண்டை, ரோஜா, கனகாம்பரம், கேந்தி போன்ற மலர்கள் அதிகம் சாகுபடியாகிறது. கடுமையான தண்ணீர் பற்றாக்குறை உள்ள நெருக்கடியான நேரத்திலும், கிணற்று நீர் பாசனத்தை பயன்படுத்தி, மலர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். ஆனால், எதிர்பாராதவிதமாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதால், மலர் சாகுபடி செய்த விவசாயிகள் நிலை பரிதாபமாக மாறியிருக்கிறது. மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடிந்துவிடும், அதன்பிறகு, மலர்களை விற்பனை செய்ய வாய்ப்பு கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், ஊரடங்கு எப்போது முடிவுக்கு வரும் என்பது விடை தெரியாத வினாவாக நீடிக்கிறது. மேலும், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்ய ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டது. ஆனால், பூ மார்க்கெட் திறப்பது குறித்து எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே, திருவண்ணாமலையில் உள்ள ஜோதி பூ மார்க்கெட் மூடப்பட்டுள்ளன. மேலும், பூக்களை வாங்குவதற்கான ஆர்வமும், தேவையும் தற்போது மக்களிடம் இல்லை. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் வாய்ப்பும் உருவாகவில்லை.
அதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்துள்ள பல்வேறு வகையான மலர்கள், பறிக்கப்படாமல் விளை நிலத்திலேயே வீணாகி வருகிறது. இரவு பகலாக நீர் பாய்ச்சி, கண்ணும் கருத்துமாக பயிர் செய்து பாதுகாத்த மலர்கள், விளை நிலத்தில் வீணாவதாலும், கடும் பொருளாதார இழப்பாலும் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.

திருவண்ணாமலையில் இருந்து நாள்தோறும் சராசரியாக 5 முதல் 7 டன் வரை மலர்கள் வெளி மாவட்டங்களுக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, அந்த வாய்ப்பு முழுவதும் பறிபோனதால், மலர்கள் கருகி வீணாகின்றன. எனவே, மிகப்பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ள மலர் சாகுபடி விவசாயிகளுக்கு, தமிழக அரசு இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Tags : district ,Thiruvannamalai , Flowers , sale , Thiruvannamalai district
× RELATED இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு...