×

50 நாளாக பறிபோன ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரம்: பசியில் வாடுகிறார்கள்

* ஊரடங்கால் முற்றிலும் வருவாய் இழந்து தவிப்பு
சேலம்: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து ஆட்டோ தொழிலாளர்கள், குடும்பத்துடன் பசியில் வாடி வருகின்றனர். இவர்களின் வறுமையை போக்க ஆட்டோக்களை இயக்குவதற்கு அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து தொழில்களும் முடங்கி, பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அத்துடன் தொழிலாளர்கள் வேலையிழந்து, பசி பிணியில் சிக்கி தவிக்கின்றனர். நாட்டில் அதிக வேலைவாய்ப்பை வழங்கும் துறையாக போக்குவரத்து இருந்து வருகிறது. இதில், சாதாரண ஏழை தொழிலாளர்கள் பெரும்பாலும் ஆட்டோ ஓட்டுநர்களாக இருக்கின்றனர். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் 24ம் தேதியில் இருந்து இன்றைய தினம் வரை சுமார் 50 நாட்களாக எவ்வித வருவாயும் இன்றி தினம் தினம் உணவுக்கு திண்டாடும் நிலையில் ஆட்டோ தொழிலாளர்கள் இருந்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு, உரிய நிவாரணம் வழங்கவில்லை. தமிழகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தின் கீழ் வரும் ஆட்டோ தொழிலாளர் நல வாரியத்தில் 100ல் 20 சதவீத ஆட்டோ தொழிலாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். அரசு அறிவிப்புபடி மாதத்திற்கு ₹1000 வீதம் 2 மாதத்திற்கு ₹2 ஆயிரம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் பாதி பேருக்கு தான், இதுநாள் வரையில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. நிவாரண பொருட்களாக 15 கிலோ ரேஷன் அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு லிட்டர் பாமாயில் ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்த நிவாரணத்தை கொண்டு வாழ்வை நடத்தும் இக்கட்டான நிலையில் சிக்கி ஆட்டோ தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். தினமும் ₹500 முதல் ₹800 வரையில் ஆட்டோ ஓட்டி சம்பாதிக்கும் டிரைவர்கள், டீசல் மற்றும் வாகன பழுது பார்ப்பிற்கு ₹300 வரை செலவு செய்கின்றனர். அதிலும் பெரும்பாலான ஆட்டோ டிரைவர்கள், வாடகை அடிப்படையில் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். அவர்கள், ஆட்டோ உரிமையாளர்களுக்கு தினமும் ₹250 முதல் ₹350 வரையில் கொடுக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் 12 ஆயிரம் பயணியர் ஆட்டோ இயங்குகிறது. இந்த ஆட்டோ தொழிலாளர்கள் அனைவரும் கடந்த 50 நாட்களாக வீடுகளில் வருவாய் இன்றி முடங்கியுள்ளனர். குடும்பத்தினருடன் வறுமையின் கோர பிடியில் சிக்கியுள்ளனர். தினமும் உணவுக்கு கடன் வாங்கி வருவதாக ஆட்டோ தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். நாளைய தினம் (17ம் தேதி) ஊரடங்கு முடிவதால், ஆட்டோ இயக்கத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஒருவேளை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால், குறைந்தது 2 பயணியுடன் ஆட்டோ இயங்க அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபற்றி ஏஐடியூசி ஆட்டோ தொழிற்சங்க பொதுச்செயலாளர் முருகன் கூறுகையில், ‘‘ஊரடங்கால் ஆட்டோ தொழில் முடங்கி கடுமையான வறுமையில் ஆட்டோ ஓட்டுநர்கள் இருக்கின்றனர். சாலையோர வியாபாரிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிவாரணம் வழங்கப்படுவது போல், ஆட்டோ தொழிலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை மூலம் மாதம் ₹7,500 நிவாரண தொகை வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் வட்டார போக்குவரத்துத்துறை அலுவலகத்திற்கு, எப்சிக்கு ஆட்டோ செல்லும்போது, நலவாரியத்திற்கு பணம் எடுக்கப்படுகிறது. அதனால், போக்குவரத்துத்துறை மூலம் நிவாரண தொகையை அரசு வழங்கினால், அனைத்து ஓட்டுநர்களுக்கும் நிவாரணம் கிடைக்கும். பசியில் வாடி வரும் ஆட்டோ தொழிலாளர்களை காக்க குறைந்த எண்ணிக்கையில், அதாவது 2 பயணியுடன் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதிக்க வேண்டும்,’’ என்றார்.

உதவாத உரிமையாளர்கள்
சேலத்தில் இயங்கும் 12 ஆயிரம் ஆட்.டோக்களில், சொந்த ஆட்டோவாக இயக்கும் தொழிலாளர்கள் சுமார் 5 ஆயிரத்திற்குள்ளாகவே இருக்கின்றனர். மீதியுள்ள ஆட்டோக்களை தினசரி வாடகை ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்கள் ஓட்டுகின்றனர். இந்த ஆட்டோக்களில் பெரும்பாலானவை காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்கள், தொழிலதிபர்களுடையது. அவர்களிடம் தினமும் ₹250 வாடகை தொகை ஒப்படைப்பு என்ற அடிப்படையில் தான், டிரைவர்கள் ஆட்டோக்களை இயக்கி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஆட்டோ தொழிலாளர்களுக்கு, பெரும்பாலான உரிமையாளர்கள் உதவவில்லை. ஒரு சிலர் மட்டும், அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை கொடுத்துள்ளனர் என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.


Tags : auto workers , Livelihood,auto workers , 50 days,starving
× RELATED திண்டுக்கல்லில் ஒன்றிய அரசைக்...