×

காட்பாடி- குடியாத்தம் வழித்தடத்தில் 4 வழிச்சாலை விரிவாக்கம் பணி மீண்டும் தொடங்கியது: புளிய மரங்கள் வெட்டி அகற்றம்

வேலூர்: காட்பாடி- குடியாத்தம் வழித்தடத்தில் சாலை விரிவாக்கம் பணிக்காக புளியமரங்களை வெட்டி அகற்றும் பணி தொடங்கி உள்ளது. வேலூர் மாநகர போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வேலூர் புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேலூர் அடுத்த பெருமுகை தொடங்கி அரப்பாக்கம், கார்ணாம்பட்டு, சேவூர், அரும்பருத்தி, புத்தூர், கண்டிப்பேடு, கரிகிரி, தாராபடவேடு, காட்பாடி வரை அமைகிறது.  இதேபோல் வேலூர், குடியாத்தம் நகரங்களின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண ₹100 கோடியில் புறவழிச்சாலைகள் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக நிலஆர்ஜிதம் செய்யும் பணிகள் முடிந்துள்ளது.

இதில் 7.1 கி.மீ நீளம் கொண்ட குடியாத்தம் புறவழிச்சாலை மங்களூர்-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை எண் 234ல் குடியாத்தம் நகருக்கு முன்பாக நெல்லூர்பேட்டை, சீவூர், பாக்கம், பிச்சனூர், கொண்டசமுத்திரம், சேத்துவண்டை கிராமங்கள் வழியாக காட்பாடி சாலையில் தேசிய நெடுஞ்சாலை 234ல் இணைகிறது. இந்நிலையில் காட்பாடியில் இருந்து குடியாத்தம் வரை செல்லும் சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த சாலை பல்வேறு கட்டங்களாக விரிவாக்கம் செய்யும் பணி நடந்து தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக காட்பாடியில் இருந்து லத்தேரி வரை இந்த பணி நடந்து வந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த பணி கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது ஊரடங்கு உத்தரவு தளர்வு செய்யப்பட்டதால், சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கி உள்ளது. இருபுறங்களில் இருந்த புளியமரங்கள் வெட்டி அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜல்லிக்கற்களை கொண்டு சமன் செய்யும் பணியும் நடந்து வருகிறது. இந்த பணி விரைவில் முடிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags : Katpadi-Gudiyatham ,road , 4-lane extension work,resumed , Katpadi-Gudiyatham road
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி