×

போச்சம்பள்ளியில் விலை வீழ்ச்சியால் விளை நிலங்களுக்கு உரமாகும் தக்காளி: விவசாயிகள் வேதனை

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் தக்காளி விலை வீழ்ச்சியடைந்ததால், விவசாயிகள் அவற்றை ஏர் உழுது அழித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள், சொட்டு நீர் பாசனம் மூலம் காய்கறி, மலர்களை சாகுபடி செய்து வருகின்றனர். நடப்பாண்டு மழை பொய்த்ததால், தண்ணீரை விலைக்கு வாங்கி, கிணற்றில் நிரப்பி விவசாயம் செய்து வருகின்றனர்.  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 24 ஆயிரம் ஹெக்டேரில் காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. அதிகபட்சமாக 8 ஆயிரம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி செய்யப்படுவதால், தமிழகத்திலேயே மிகப்பெரிய தக்காளி மார்க்கெட் ராயக்கோட்டையில் செயல்பட்டு வருகிறது.  

ராயக்கோட்டையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தக்காளி விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது. போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் தக்காளி காரிமங்கலம், கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தக்காளி விளைச்சல் அதிகரித்ததால், விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் ஏரியில் மீன்களுக்கு உணவாக தக்காளியை கொட்டி சென்றனர். மேலும், தக்காளி தோட்டங்களை ஏர் உழுது அழித்து வருகின்றனர்.

இதுகுறித்து போச்சம்பள்ளி அருகே திருவயலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முருகன் கூறுகையில், 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்து, மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக எடுத்து சென்றபோது, கிலோ 5க்கு கூட விற்பனையாகவில்லை. தோட்டத்தில் அறுவடைக்கு தயாரான தக்காளியை இலவசமாக பறித்து செல்ல கூறியும், யாரும் முன்வரவில்லை. அதனால், செடிகளை பிடுங்காமல் டிராக்டர் மூலம் உழுது நிலத்திற்கு உரமாக்கி வருகிறேன். இதனால் ₹50 ஆயிரத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது ன்றார்.

Tags : Pochampalli ,price drop ,Pochampalli: Farmers of Agony , Tomato , fertilizer, plots resulting , price drop at Pochampalli, agony of farmers
× RELATED தடுப்பூசி போட்ட 2வது நாளில் ஒன்றரை மாத குழந்தை சாவு