×

கோயில்களை திறக்க ஆந்திர அரசு அனுமதி: ஏழுமலையானையும் பார்க்கலாம்

திருமலை: ஆந்திர மாநில இந்து அறநிலையத்துறை நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: ஊரடங்கால் காளஹஸ்தி சிவன் கோயில் உட்பட முக்கிய கோயில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட்ட நிலையில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை திறக்க மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கலாம். பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பக்தர்களை சுரங்க கிருமிநாசினி பாதை வழியாக சமூக இடைவெளியுடன் அனுமதிக்க  வேண்டும். ஆதார் அட்டை மூலமாக ஆன்லைனில் டிக்கெட் வழங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு 250 பக்தர்களுக்கு அனுமதிக்கலாம்.  

அர்ச்சகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சடாரி, தீர்த்தம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் செல்லும் வரிசைகள் அனைத்தையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆந்திர அரசின் அரசாணையை திருமலை திருப்பதி தேவஸ்தானமும் நடைமுறைப்படுத்துவது வழக்கம். அதன்படி, விரைவில் திருப்பதி ஏழுமலையான் கோயிலும் திறக்கப்பட உள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Tags : Andhra Pradesh ,temples , Temples, Andhra Pradesh, Ezumalayan
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...