×

கேளம்பாக்கம், நாவலூர் உட்பட 11 மதுக்கடைகளுக்கு தடை

திருப்போரூர்: ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்படாத நிலையில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகளை அரசு திறந்தது. சென்னையில் மட்டும் கடைகள் திறக்கப்படாததால் புறநகர் பகுதியான திருப்போரூர், ஆலத்தூர், கொட்டமேடு, மாமல்லபுரம், வட நெம்மெலி போன்ற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்னைவாசிகள் படையெடுத்தனர். இதனால் ஒரு நாளில் 2 லட்சத்துக்கு மது விற்கும் கடையில், 16 லட்சத்திற்கு மது விற்பனை ஆனது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் மது வாங்க அணிவகுத்ததால் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க முடியாமல் போலீசார் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றம் மதுக்கடைகளுக்கு தடை விதித்தது. அதை தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர் தவிர மற்ற மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான கேளம்பாக்கம், நாவலூர், படூர் ஆகிய பகுதிகளோடு சேர்த்து திருப்போரூர், ஆலத்தூர், வட நெம்மேலி, கொட்டமேடு, வெங்கூர், மாமல்லபுரம் ஆகிய இடங்களில் உள்ள 11 மதுக்கடைகளை திறக்க செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி. கண்ணன் தடை விதித்துள்ளார். செங்கல்பட்டு, மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர், அச்சிறுப்பாக்கம் போன்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மட்டும் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : liquor shops ,Kelambakkam ,Navalur , Eleven liquor shops including Kelambakkam and Navalur banned
× RELATED கேளம்பாக்கம் அருகே பரபரப்பு தனியார்...