×

மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை 8 மணி நேரம் அலைக்கழித்த அதிகாரிகள்

* ஆம்புலன்சிலேயே பரிதவித்த அவலம்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை ஹரி நாராயணபுரம் சி.பி சாலையை சேர்ந்த 80 வயது ஆஸ்துமா நோயாளிக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், புரசைவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு ரத்த பரிசோதனை செய்தபோது, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரிய வந்தது. இதையடுத்து, தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுங்கள் என்று கூறியது. அதன்பேரில், அவரது உறவினர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தபோது, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மூலமாக அழைத்து வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட மாநகராட்சி 4வது மண்டல அதிகாரியை தொடர்பு கொண்டபோது, அவர் பதிலளிக்கவில்லை, என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் வசிக்கும் 47வது வார்டு சுகாதார அதிகாரிகளை தொடர்புகொண்ட போது, இங்கு அழைத்து வரகூடாது என்று கூறியுள்ளனர். இதனிடையே, தனியார் மருத்துவமனை நிர்வாகம் காலை 10 மணிக்கு அவரை வெளியே அனுப்பியதால், ஆம்புலன்சில் ஏற்றப்பட்ட அவர், மாலை 6 மணி வரை அதிலேயே வைக்கப்பட்டு இருந்தார். கொரோனா தடுப்பு உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டும் உரிய நடவடிக்கை இல்லாததால், உறவினர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

ஒருவழியாக மாலை 6 மணிக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, இடவசதி இல்லையென கூறி, பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளனர். இதனால், 8 மணி நேரத்துக்கும் மேலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் பரிதவித்தனர். பின்னர் ஒருவழியாக அந்த நோயாளியை பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து நோயாளிகளின் உறவினர் கூறுகையில், ‘‘கொரோனா பாதிப்பு இருந்தால் தடுப்பு முகாமிற்கு தொடர்பு கொள்ளலாம், என அரசு அறிவித்துள்ளது. ஆனால், கொரோனாவால் பாதித்த நோயாளியை மருத்துவனையில் அனுமதிக்காததால் 8 மணி நேரம் ஆம்புலன்சிலேயே நோயாளியை வைத்திருந்தோம். நோயை குணமாக்க போராடும் நிலை மாறி, மருத்துவமனையில் அனுமதிக்கவே போராட வேண்டியுள்ளது,’’ என்றார்.



Tags : coronation center , Hospital, Corona, Curfew
× RELATED திருத்தணிகாசலம் கண்டுபிடித்த கொரோனா...