×

‘வந்தே பாரத்’ 2ம் கட்டத்தில் சிறப்பு விமானங்களை இயக்குவதில் புறக்கணிக்கப்பட்டது தமிழகம்: வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் அதிர்ச்சி

துபாய். உலகம் முழுவதும் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக 2ம் கட்டமாக இயக்கப்படும் 149 சிறப்பு விமானங்களில் ஒன்று கூட தமிழகத்துக்கு இயக்கப்படவில்லை. இதனால், இந்தியா திரும்ப விரும்பும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள். தாயகம் வர விரும்புகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக ‘வந்தே பாரத்’ திட்டத்தின் மூலம் மத்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி வருகிறது. முதல் கட்டமாக இயக்கப்பட்ட விமானங்களில், ஏராளமான இந்தியர்கள்  அழைத்து வரப்பட்டனர். அடுத்ததாக, ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 31 நாடுகளில் உள்ள இந்தியர்களை அழைத்து வருவதற்காக 149 சிறப்பு விமானங்களை, ‘வந்தே பாரத்’தின் 2ம் கட்டத்தில் மத்திய அரசு இயக்குகிறது.  

இதன் மூலம், 30 ஆயிரம் பேர் அழைத்து வரப்பட உள்ளனர். ஆனால், இந்த 2ம் கட்ட சிறப்பு விமான திட்டத்தில் தமிழகம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. 149 விமானங்களில் தமிழகத்துக்கு என்று ஒன்று கூட இயக்கப்படவில்லை.  ஐக்கிய அரபு அமீரகத்தில் 28 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உள்ளனர். தற்போதைய சூழலில் இவர்களில் பலரும் தாயகம் திரும்புவதற்காக, மத்திய அரசும், தமிழக அரசும் அறிவித்துள்ள இணையதளங்களில் பதிவு செய்துள்ளனர். முதல் கட்ட ‘வந்தே பாரத்’ நடவடிக்கையில், துபாயில் இருந்து 2 விமானங்கள் சென்னைக்கு இயக்கப்பட்டது. அவற்றில் 360-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்தனர். ஆனால், 2ம் கட்டத்தில் ஒரு சிறப்பு விமானம் கூட இந்நாட்டுக்கு இயக்கப்படவில்லை.

விசிட் விசாவில் வந்தவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள், வேலை இழந்தவர்கள் என பாதிக்கப்பட்ட ஏராளமான தமிழர்கள், தமிழகம்  திரும்ப வேதனையுடன் அமீரகத்தில் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், தமிழகத்துக்கு என சிறப்பு விமானங்களை இயக்காமல் மத்திய அரசு புறக்கணித்து இருப்பது, அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘இத்திட்டத்தில், அண்டை மாநிலமான கேரளாவுக்கு 6 விமானங்கள் இயக்கப்பட உள்ளது. ஒருவேளை இந்த விமானங்களில் நாங்கள் வந்தாலும், அங்கிருந்து வேறு வாகனங்களில் தமிழகம் வந்து சேருவது என்பது இந்த ஊரடங்கில் மிகவும் சிக்கலான காரியமாக இருக்கும்,’ என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

‘மதுரை, திருச்சிக்கும் வேண்டும்’
தமிழர்களை நிர்வாகிகளாக கொண்ட துபாய் ஈமான் அமைப்பினர் கூறுகையில், ‘‘மத்திய அரசின் பாரபட்சம் குறித்து இந்திய துணை தூதரகத்தில் முறையிட்டுள்ளோம். சென்னை மட்டுமின்றி, மதுரை, திருச்சிக்கும் சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும். 2வது கட்டத்தில் ஒரு விமானம் கூட தமிழகத்திற்கு இயக்கப்படாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தமிழகத்துக்கும் விமானங்களை இயக்க வேண்டும்,’’ என்றனர்.



Tags : Vande Bharat ,Tamils ,Tamil Nadu ,flights , Occasion comes Bharat 2, special flights, Tamil Nadu, overseas, Tamils
× RELATED தேர்தல் தொடர்பான விளம்பரங்களை மெட்ரோ,...