×

மூன்றாவது கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் பேருந்துகளை இயக்க பஸ் ஸ்டாண்டுகள் தயார்:சமூக இடைவெளிக்காக வட்டம் வரையும் பணி தீவிரம்

* அரசு உத்தரவுக்கு பிறகு சேவை துவங்கும்

சென்னை: மூன்றாவது கட்ட ஊரடங்கு முடியும் நிலையில் பஸ்களை இயக்கும் வகையில் அரசு பஸ் ஸ்டாண்டுகள் தயார் நிலையில் உள்ளன. இதன் ஒருபகுதியாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வட்டங்கள் வரையும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசு உத்தரவுக்கு பிறகு சேவையை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக நீடித்து வரும் ஊரடங்கால், தொழில் நிறுவனங்கள், குறு, சிறு தொழில்கள் அடியோடு முடங்கி உள்ளன. இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தளர்வுகள் வழங்கப்பட்ட துறைகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், கடைகள் போன்றவை தற்போது செயல்பட துவங்கி விட்டது.

பொது போக்குவரத்து செயல்படுவது குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை. இதற்கிடையில் போக்குவரத்து துறை முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.  அதில், ‘முதற்கட்டமாக தேவையான அளவுக்கு பேருந்துகளை இயக்க வேண்டும். முதற்கட்ட இயக்கத்தை பரிசீலனை செய்த பிறகே அதில் மாற்றங்கள் தேவைப்பட்டால் செய்ய வேண்டும். சாதாரண நாட்களில் தரவுகளை ஆராய்ந்து அதிக அளவிலான பேருந்துகள் தேவைப்படும் வழித்தடங்களில் பேருந்துகளை அதிகரிக்கவும். அதிகபட்சமாக அனுமதிக்கக்கூடிய மொத்த பயணிகள் திறன் 50 சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

பயணிகளின் இருக்கை மற்றும் நிற்பதற்கான இடங்களில் தனிநபர் இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். அதற்கேற்ற ஏற்பாடுகளை செய்யவேண்டும். பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கு பின்புற வழியையும், இறங்குவதற்கு முன்புற வழியையும் பயன்படுத்துவதற்கும் உடல்ரீதியான தொடர்புகளை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும். பயணிகள் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும். ஏறுவதற்கும், இறங்குவதற்கும் அனுமதிக்கப்பட்ட வழிகளை பின்பற்ற வேண்டும். அமருவதற்கும், நிற்பதற்குமான இடங்களும் குறிக்கப்பட்டுள்ளது. பஸ்சில் ஏறி, இறங்கும்போதும் மற்றும் பஸ் நிறுத்தங்களில் காத்திருக்கும் போது ஒருவொருக்கொருவர் குறைந்தது 6 அடி தூரத்தை பராமரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருந்தது. இதனால் மக்களிடத்தில் மீண்டும் அரசு பஸ் சேவை துவங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் நாளையுடன் (17ம் தேதி) 3வது கட்ட ஊரடங்கு முடிவடைகிறது. இதற்கிடையில் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பல்வேறு இடங்களில் 6 அடி இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டுள்ளன.  இந்த கோடுகள் வரையப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே பயணிகள் நிற்க முடியும். முன்னாள் இருப்பவர் நகர்ந்தால் மட்டுமே அடுத்தவர் முன்னோக்கி செல்ல முடியும். இதன்மூலம் ஒருவரையொருவர் மோதுவது தடுக்கப்படும். இதேபோல் உடல் வெப்பநிலையை கண்டறியும் கருவியும் நுழைவாயில் வைக்கப்படவுள்ளது.

இதன்மூலம் பயணம் மேற்கொள்வதற்காக வரும் அனைவரின் உடல் வெப்பம் குறித்தும் பரிசோதனை செய்யப்படும். மேலும் பாதுகாப்பான முறையில் சேவை வழங்கும் வகையில் பிரத்யேகமாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  இதேபோல் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஸ்களில் பேட்டரி, பிரேக் உள்ளிட்ட அனைத்தும் சோதனை செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியானது அனைத்து போக்குவரத்துக்கழகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து பஸ்களை இயக்கலாம் என அரசு உத்தரவிட்டவுடன், பாதுகாப்பான முறையில் பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : phase ,bus stop , Curfew, Buses, Bus Stands, Spacing, Corona
× RELATED 2ம் கட்ட தேர்தல் 89 தொகுதிகளில் மனு தாக்கல் இன்று துவக்கம்