×

18ம் தேதி முதல் பள்ளி கல்வித்துறையினர் பணிக்கு வர உத்தரவு

சென்னை: அரசு அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க வேண்டும் என்று நேற்று அரசாணை வெளியிட்டதை அடுத்து,  பள்ளிக் கல்வி, தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வி, தொடக்க
கல்வி இயக்குநர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டன. அதேபோல அரசு ஊழியர்கள், ஆசிரியர்களும் பணிக்கு வராமல் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், 33% பணியாளர்களுடன் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் செயல்படலாம் என்று கடந்த வாரம் அரசு அறிவித்து. இதன் பேரில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மே 17ம் தேதி (நாளை)யுடன் ஊரடங்கு முடியஉள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கையாக அரசு அதிரடியாக நேற்று ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 18ம் தேதி  முதல் அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50% ஊழியர்களுடன் செயல்பட வேண்டும் என்றும், ஊழியர்களை 2 பிரிவாக பிரித்து ஷிப்ட் அல்லது  சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும், ஏ குரூப் அதிகாரிகள், தலைமைப் பதவியில் இருப்போர் வாரத்தில் 6 நாட்கள் பணிக்கு வர வேண்டும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, அரசுத் தேர்வுகள் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், அனைவருக்கும் கல்வி  இயக்கம், சமக்ர சிக்‌ஷா திட்டம் உள்ளிட்ட அனைத்து கல்வித்துறை அலுவலப் பணியாளர்கள் 18ம் தேதி முதல் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தங்கள் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, 18ம் தேதி முதல் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க தொடங்கும்.



Tags : school education department , School Education Department, Government Offices, Corona, Curfew
× RELATED வாக்கு எண்ணிக்கை – அதிகரிக்கும்...